இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் டூயட் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் பிரகாஷ்ராஜ். இதுவரை தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி உள்ளிட்ட 6 மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார். தனது சிறப்பான நடிப்பால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர்.
ஆரம்பத்தில் பல படங்களில் வில்லனாக நடித்த பிரகாஷ் ராஜ் பிறகு குணச்சித்திர வேடங்களில் அதிகமாக நடித்தார். குறிப்பாக மொழி அபியும் நானும் 60 வயது மாநிறம் உன் சமையல் அறையில் போன்ற படங்களில் அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மேலும் திரைப்பட தயாரிப்பாளராகவும் அவர் படங்களை தயாரித்துள்ளார்.
சமீபத்தில் நடிகர் பிரகாஷ்ராஜின் தாயார் ஸ்வர்ணலதா 86 வயதான நிலையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். கிறிஸ்துவ மத நம்பிக்கைகளை பின்பற்றிய தனது தாயின் மறைவுக்குப் பிறகு ஒரு தேவாலயத்தில் பாரம்பரிய முறைப்படி அவரது தாயார் சொர்ணலதா நல்லடக்கம் செய்யப்பட்டார். அந்த இறுதிச்சடங்கின் காட்சிகள் இணையத்தில் வெளியானது.
இதைத் தொடர்ந்து நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னை ஒரு நாத்திகர் என்று முன்பு கூறியிருந்ததை சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் சிலர் அவரை கடுமையாக விமர்சித்தனர். பிரகாஷ்ராஜ் தன்னை ஒரு நாத்திகர் என்றும் கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்று கூறிக் கொள்கிறார். ஆனால் தனது தாயின் சடங்குகளை கிறிஸ்தவ மரபுகளின் படியே செய்கிறார் என்று விமர்சனம் செய்தனர்.
அதற்கு எக்ஸ் வலைதள பக்கத்தில் பதில் அளித்திருக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது பதிவில் கூறியிருப்பதாவது, ஆமாம் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை தான். ஆனால் என் தாய்க்கு கடவுள் நம்பிக்கை உண்டு. அவரது நம்பிக்கையை மறுக்க நான் யார்? அவரது நம்பிக்கையின்படி தானே உடலை அடக்கம் செய்ய முடியும்?
இதுதானே ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அடிப்படையான மரியாதை. வெறுப்பை தூண்டுபவர்கள் இதை புரிந்து கொள்வார்களா என்று தனது எக்ஸ் தளத்தில் பிரகாஷ் ராஜ் பதிலடி தந்திருக்கிறார். தாயின் மறைவால் பிரகாஷ் ராஜ் வருத்தத்தில் இருப்பார். அந்த சூழலில் இதுபோன்ற தனிப்பட்ட விமர்சனம் செய்வதே மிகவும் தவறு என்றும் ஒரு தரப்பினர் பிரகாஷ் ராஜூக்கு ஆதரவான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





