சமீபத்தில் திரைப்பட இயக்குனர் வெற்றி வீரன் மற்றும் காமெடி நடிகர் கொட்டாச்சி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது நடிகர் கொட்டாச்சி கூறியதாவது, நானும் நடிகர் சூரியும் பல ஆண்டுகள் ஒன்றாக ஒரே அறையில் இருந்திருக்கிறோம். நாங்கள் திருமண மண்டபத்தில் வேலை செய்திருக்கிறோம்.
ஒரே அறையில் தங்கி சினிமா வாய்ப்புகளைத் தேடி கஷ்டப்பட்டு இருக்கிறோம். இன்று சூரி பெரிய நடிகராக உயர்ந்திருப்பது மகிழ்ச்சிதான். ஆனால் அதே நேரத்தில் வளர்ந்து வரும் சக கலைஞர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்க அவர் உதவ வேண்டும். என் படத்துக்காக ஒரு காணொளி அல்லது ஒரு சமூக வலைதள பதிவு செய்து உதவுமாறு அவரிடம் கேட்டேன்.
ஆனால் அதைச் செய்ய அவர் மறுத்துவிட்டார். ஒரு நண்பனாக ஒரு சிறிய உதவி தான் கேட்டேன். ஆனால் அதை செய்தால் பிறகு பலரும் வந்து என்னிடம் அதே மாதிரி உதவி கேட்பார்கள் என்று சொல்லி சூரி அதற்கு மறுத்துவிட்டார். நான் நீங்கள் என்னுடைய படத்துக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன்.
அதற்கு முடியாது என்று சூரி மறுத்து கூறிவிட்டார். அப்படி என்றால் என் படம் குறித்து ஒரு ஆடியோவாவது பேசி மெசேஜ் பண்ணுங்கள். நான் அந்த ஆடியோவை உங்கள் புகைப்படத்தை போட்டு பிரமோஷனுக்கு பயன்படுத்திக் கொள்கிறேன் என்றும் கேட்டேன். அதற்கு கூட அவர் சம்மதிக்கவில்லை. இப்படி சக கலைஞர்களுக்கு உதவ முன் வராத நடிகர் சூரி மேடைகளில் இல்லாத கதைகளை சொல்லி நடித்துக் கொண்டிருக்கிறார் என்று கொட்டாச்சி கூறினார்.
அப்போது நடிகர் கொட்டாச்சி அருகில் இருந்த இயக்குனர் வெற்றிவீரன் கூறியதாவது, நடிகர் சூரி என்னுடன் பல ஆண்டுகள் ஒன்றாக இருந்தவர். நானும் அவரும் ஒரு திருமண மண்டபத்திற்கும் ஒரு பள்ளிக்கூடத்துக்கும்தான் பெயிண்ட் அடிக்க சென்றோம். ஆனால் சென்னையில் உள்ள அனைத்து கட்டிடங்களுக்கும் அவர்தான் வெள்ளையடித்தேன் என்று ஒவ்வொரு மேடையிலும் பேசி சிம்பதி கிரியேட் பண்ணிக் கொண்டிருக்கிறார்.
உண்மையில் சூரி ஒவ்வொரு முறையும் திரைப்படத்தின் பிரமோசனுக்காக சிம்பதிக்காக பல கட்டுக்கதைகளை மேடைகளில் கூறிக் கொண்டிருக்கிறார். அவர் சொல்வதில் பெரும்பாலும் உண்மை இல்லை. அவர் எனக்கு உதவ வேண்டாம். சக நடிகராக கொட்டாச்சி ஒரு சிறு உதவி கூட செய்ய மறுப்பதில் நியாயமே இல்லை என்று இயக்குனர் வெற்றி வீரன் அப்போது கூறியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.





