தமிழ் சினிமாவில் இப்போது ரஜினி சீசன், கமல் சீசன், விஜய் சீசன், அஜித் சீசன் என்பது போல விவாகரத்து சீசன் என்று சொல்லும் அளவுக்கு நடிகர், நடிகைகள் சில தங்களது குடும்ப வாழ்க்கையை வெறுத்து, விவாகரத்து செய்து வருகின்றனர். ஏதோ ரேஷன் கடை வரிசையில் அரிசி, பருப்பு வாங்குவது போல, குடும்ப வாழ்க்கையில் இந்த விவாகரத்து வாங்குவது மிக சாதாரணமாக மாறிவிட்டது.
அந்த வகையில் சமீபத்தில் நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் விவாகரத்து கேட்டு, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். வரும் அக்டோபரில் இவர்களது விவாகரத்து மனு விசாரணைக்கு வருகிறது. இதேபோல் தமிழ் சினிமாவில் ஏற்கனவே ராமராஜன் – நளினி, பார்த்திபன் – சீதா, நாக சைதன்யா – சமந்தா, ஜிவி பிரகாஷ் குமார் – சைந்தவி என விவாகரத்து செய்து கொண்ட நட்சத்திரத்தம்பதியர் பட்டியல் நீண்டு வருகிறது.
சினிமாவில் குடும்ப ஒற்றுமை பற்றியும் கணவன் மனைவி தாம்பத்திய உறவு குறித்தும் மேன்மையை சொல்லும் படங்களில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள், தங்களது சொந்த வாழ்க்கையில் இப்படி பல ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்து விட்டு தங்களது சொந்த விருப்பு வெறுப்பு காரணமாக விவாகரத்து செய்வது ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி, அவரது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் பல ஆண்டுகளாகவே அவர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு அதிகரித்து விரிசல் அதிகமாகி, இப்போது விவாகரத்து என்ற முடிவுக்கு வந்திருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதற்கும் ஆர்த்தியின் தாயார் சுஜாதா தான் ஜெயம் ரவி நடிக்கும் பெரும்பாலான படங்களின் தயாரிப்பாளராக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனினும் ஜெயம் ரவி ஆர்த்தி இருவரும் கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே காதலித்து, பல ஆண்டுகளாக காதலர்களாக இருந்து பிறகு திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் ஆர்த்தி ஜெயம் ரவி பிரிவது உறுதி என்றும் இருவரும் விவாகரத்து செய்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஈடுபட்டிருப்பதாகவும் சில தினங்களுக்கு முன் தகவல் வெளிவந்தது.
ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில் ஜெயம் ரவி அறிமுகமான ஜெயம் படத்தில் சதா உடன் ஒரு காட்சியில் நடித்த புகைப்படத்தில் சிரித்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டிருப்பார். அதற்கு கீழே காதல் என்னும் வார்த்தை, அது வார்த்தை அல்ல வாழ்க்கை என்று ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி. இதன்மூலம் காதல் என்பது வார்த்தை அல்ல, அது வாழ்க்கை என்று பாடலின் வரிகளை பகிர்ந்து இருப்பதன் மூலம் தனது கணவருடன் அவர் ஆழமான காதல் கொண்டிருப்பதையும் அவர்களுக்குள் பிரிவு என்பதற்கு சாத்தியமே இல்லை என்பதற்கு அடையாளமாக இந்த பதிவை அவர் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.





