பாலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். கேங்ஸ்டர் என்ற படத்தின் மூலம் 2006ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமான அவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து புகழ் பெற்றார். குறிப்பாக அவர் நடித்த குயின் படம் அவருக்கு மிகச்சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றுத்தந்தது. அதுமட்டுமின்றி அவர் தேசிய விருது, பிலிம்பேர் விருதையும் பெற்றிருக்கிறார். மேலும் பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருக்கிறார்.
தனது மனதில் பட்டதை எதை பற்றியும் கவலைப்படாமல் பட்டென்று போட்டு உடைப்பவர் கங்கனா ரணாவத். சமீபத்தில்கூட ரன்பீர் கபூர், ஆலியா பட் குறித்து பேசியிருந்த அவர், “இரண்டு பேரும் ஒரே வீட்டில் வேறு வேறு மாடியில் வாழ்கிறார்கள். ஆலியா படம் தனது குழந்தையை இந்தியாவில் விட்டுவிட்டு லண்டனுக்கு பறந்தார். அவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்வது போல் வெளியுலகத்துக்கு காட்டிக்கொள்கிறார்கள். பணத்துக்காக திருமணம் செய்துகொண்டால் இதுதான் நிலைமை” என கூறினார்.
அதேபோல் சில வருடங்களுக்கு முன்பு கிருத்திக் ரோஷன் தன்னுடன் டேட்டிங் சென்றதாகவும் தெரிவித்திருந்தார். அந்த விவகாரம் நீதிமன்றம்வரை சென்றது குறிப்பிடத்தக்கது. அவர் தமிழில் தாம் தூம் படத்தின் மூலம் அறிமுகமானார். அதனையடுத்து ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான தலைவியில் நடித்தார். இரண்டு படங்களுமே சரியாக போகவில்லை. தற்போது சந்திரமுகி 2 படத்தில் நடித்திருக்கிறார். படமானது செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது. மேலும் ஹிந்தியில் இந்திரா காந்தியை மையப்படுத்தி எமர்ஜென்சி என்ற படத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் சமூக வலைதளத்தில் கங்கனா ரணாவத் பேசியிருக்கும் விஷயம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தனது இன்ஸ்டாகிராமில் அதர்மத்தை அழிப்பதே தர்மத்தின் நோக்கம் என்று கீதையில் இருக்கும் வாசகத்தை மேற்கோள் காட்டி, “திரைப்பட மாஃபியாக்கள் எப்போதும் தங்களது இயல்பான வேலையில் ஈடுபடுகின்றனர். நான் ஏற்கனவே டேட்டிங் செய்த ஒரு பிரபல பாலிவுட் நடிகர் ஃபேக் ஐடியை சோஷியல் மீடியாவில் உருவாக்கி என்னிடம் சேட் செய்வார்.
அதேபோல் அவர் என்னுடைய சமூக வலைதள பக்கத்தை முடக்கி என்னை மிரட்டவும் செய்தார். அதுமட்டுமின்றி பெண் ரசிகைகளை அதிகமாகக் கொண்ட மற்றொரு பாலிவுட் நடிகர் எனது வீட்டிற்கு வந்து தன்னுடன் டேட்டிங் செய்ய வேண்டுமென கெஞ்சினார். நான் செல்லும் பல இடங்களுக்கு அவர் பின் தொடர்ந்துகொண்டே வந்தார். நான் அதை புறக்கணித்துவிட்டேன்” என பதிவிட்டிருக்கிறார். அவரது இந்த பதிவு பாலிவுட்டில் புதிய பரபரப்பை கிளப்பி யார் அந்த ஹீரோக்கள் என்ற கேள்வியையும் எழ செய்திருக்கிறது.





