தெலுங்கு சினிமாவில் மிகப் பெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். முதலில் இந்த திரைப்படத்தை பாலா இயக்கி இருந்தார். வர்மா என்ற பெயரில் இது எடுக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்த திரைப்படம் சுத்தமாக பிடிக்கவில்லை என்று கூறி, மீண்டும் அதனை தயாரிப்பதாக அறிவித்தார்கள்.
அதில் பாலா இயக்குனராக இருக்க மாட்டார் என்றும் தெரிவித்தார்கள். இதனால் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் அதிர்ச்சி அடைந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் அந்த திரைப்படத்தில், துருவ் நடித்தார். அந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போதும் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.
பிறகு தனது தந்தை விக்ரமுடன் இணைந்து மகான் திரைப்படத்தில் நடித்தார் துருவ். கார்த்திக் சுப்புராஜ் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆக்சன் பாணியில் அருமையாக எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது. மகான் நல்ல விமர்சனத்தை பெற்றாலும், அது திரையரங்குகளில் வெளியாகாத காரணத்தால் மக்களிடையே ரீச் ஆகவில்லை.
இப்படி முதல் இரண்டு திரைப்படங்கள் துருவிற்கு சோகத்தை கொடுக்க, அதன் பிறகுதான் மாரி செல்வராஜுடன் கைகோர்த்தார். பைசன் திரைப்படத்திற்காக இரண்டு ஆண்டுகள் மட்டும் கபடி பயிற்சி மேற்கொண்டார் அவர். மனத்தி கணேசன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் தற்போது தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது.
தென் மாவட்டங்களில் நிலவும் சாதிய மோதல், இரு தரப்புகளுக்கு இடையே நிலவும் பகை என அத்தனை விஷயங்களையும் தாண்டி விட்டு எப்படி ஒருவன் தனக்கு பிடித்தமான விஷயத்தில் சாதிக்கிறான் என்பது தான் இந்த திரைப்படத்தின் கதை. பைசன் திரைப்படத்தில் இடம்பெற்ற பசுபதி, அமீர், லால் என அனைவரும் தங்களது கதாபாத்திரத்தை கச்சிதமாக உணர்ந்து செயல்பட்டு உள்ளனர்.
துருவ் விக்ரமின் நடிப்பு மிகப் பெரும் அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் யாருடன் இணைய போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. அப்படி இருக்க அவர் அடுத்ததாக இயக்குனர் கணேஷ் கே பாபு உடன் இணைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேஷ் கே பாபு ஏற்கனவே, டாடா திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டவர். தற்போது ரவிமோகனை வைத்து, கராத்தே பாபு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதன் பிறகு அவர் துருவ் உடன் இணையலாம் என்று பேச்சு அடிபடுகிறது.





