நடிகர் விஜய் நடித்த தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் வருகிற 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் காலை 9 மணிக்கும், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் காலை 7 மணிக்கும் முதல் காட்சி திரையிடப்படுகிறது. கேரளம் மாநிலத்தில் மட்டும் அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனால் முதலில் கேரளா மாநில விஜய் ரசிகர்களும், அடுத்து ஆந்திரா, கர்நாடகா மாநில ரசிகர்களும் தி கோட் படத்தை பார்த்த பிறகே தமிழ்நாட்டில் ரசிகர்கள், தி கோட் படத்தை பார்க்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. இதே நிலை தான் லியோ படம் ரிலீஸின் போதும் நடந்தது. இப்போது தி கோட் படத்திலும் அதுவே நீடிக்கிறது.
இந்நிலையில் தி கோட் படம் திரையிடுவதில் மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் வினியோகம் செய்ய உரிமம் பெற்றுள்ள ராகுல் என்ற வினியோகஸ்தர், ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 700 கட்டணம் நிர்ணயித்து வரும் 5ம் தேதி காலை 9 மணிக்கு காட்சிக்கு தர வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்களை நிர்பந்திப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் அந்த 6 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்கள், படம் ரிலீஸாகும் நாளில் காலை 9 மணி காட்சியை காண முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் அன்று காலை 9 மணி காட்சி திரையிடுவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் இருப்பதால் ரசிகர்களும் ஏகப்பட்ட குழப்பத்தில் உள்ளனர்.
தி கோட் படத்தில் இருந்து இதுவரை 4 சிங்கிள்கள் வெளிவந்துள்ளன. 4 பாடல்களில் 3 பாடல்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் தி கோட் படத்தின் டிரெய்லர் கடந்த 17ம் தேதி மாலை வெளியான நிலையில், இதுவரை 45 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக கூறப்பட்டது.
நேற்று மாலை, தி கோட் படத்தில் இருந்து மட்ட பாடல் வெளியானது. இந்த பாடல் வெளியான 24 மணி நேரத்தில், அதாவது ஒரு நாளில் மொத்தம் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக தி கோட் படக்குழு ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தரப்பில் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதுவும் யூடியூப் தளத்தில் டிரெண்டிங்கில் இந்த மட்ட பாடல் முதலிடத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது, தளபதி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.





