ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வி என்பது படத்தின் டைரக்டர் மற்றும் படத்தின் ஹீரோ ஹீரோயின் இசையமைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் போன்றவர்களை பெரிய அளவில் பாதிக்க செய்வதில்லை. அவர்களுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்து விடுகின்றன. ஆனால் ஒரு படம் தோல்வி அடைந்து பலத்த நஷ்டத்தை சந்தித்தால் அதன் முழு சுமையையும் ஏற்க வேண்டியது தயாரிப்பாளர் மட்டுமே.
அந்த வகையில் இந்திய சினிமாவில் இதற்கு முன்பு வேறு எந்த ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கும் இப்படி ஒரு மோசமான தோல்வியும் நஷ்டமும் கிடைத்திருக்காது என்று சினிமாத்துறையினரே கவலைப்படும் அளவுக்கு ஒரு நிறுவனம் உள்ளது என்றால் அது கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் தான். கர்நாடகாவை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இந்த ஆண்டில் 3 படங்கள் வெளியாகின.
முதல் படமாக கேடி தி டெவில் என்ற கன்னடப் படம் வெளியானது. அதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் என்ற தமிழ் படம் வெளியானது. சில தினங்களுக்கு முன்பு நடிகர் யஷ் கியாரா அத்வானி நயன்தாரா நடித்த டாக்ஸிக் என 3 படங்கள் அடுத்தடுத்து வெளிவந்தன. இதில் கேடி தி டெவில் படத்தின் மொத்த பட்ஜெட் 100 கோடி ரூபாய் என்றும், ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய் என்றும் டாக்ஸிக் படத்தின் பட்ஜெட் 600 கோடி ரூபாய் என்றும் சொல்லப்படுகிறது.
ஆக மொத்தம் இந்த மூன்று படங்களின் மொத்த பட்ஜெட் 1100 கோடி ரூபாய் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் கேடி தி டெவில் படம் படுதோல்வியை சந்தித்தது. மொத்தமாகவே இந்த படம் 25 கோடி ரூபாய் தான் வசூலித்தது என்று சொல்லப்படுகிறது. நடிகர் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் படத்திற்கான அதிகாரபூர்வமான வசூல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஆனால் ஜனநாயகன் படம் 300 கோடி ரூபாய் வசூலை கடந்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் சில தினங்களுக்கு முன்பு வெளியான டாக்ஸிக் படத்தின் வசூலும் 200 கோடி ரூபாய் வரை கடந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த படங்களின் மூலமாக தயாரிப்பு நிறுவனத்திற்கு குறைந்தபட்சம் 500 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இவ்வளவு பெரிய நஷ்டத்தை தயாரிப்பு நிறுவனம் எப்படி தாக்குப் பிடிக்கும் என்பதுதான் திரையுலகினரின் அனுதாபத்திற்கு காரணமாக உள்ளது. இப்படி தொடர்ந்து பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் மோசமான தோல்வியை சந்திக்கும்போது ஒரு தயாரிப்பு நிறுவனம் மிக மோசமான நெருக்கடியை சந்திக்கும். மூன்று படங்கள் அடுத்தடுத்து தோல்வி படங்களாக அமைந்திருப்பது கேவிஎன் ப்ரொடக்சன்ஸ் நிறுவனத்திற்கு பெரிய பின்னடைவை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





