நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் தக்லைப் படத்தின் படப்பிடிப்பு, இன்று சென்னையில் துவங்கியிருக்கிறது. மணிரத்னம் இயக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மணி மஹாலில் நடந்து வருகிறது. அடுத்து, ஒரு பள்ளியில் ஷூட்டிங் நடத்துவதற்கான செட்டிங் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த படத்தில் கமல்ஹாசனுடன் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, திரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் படத் தயாரிப்பு தரப்பில் இருந்தோ, மணிரத்னம் தரப்பில் இருந்தோ நடிகர்கள், நடிகையர் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வரும் இந்தியன் 2, இந்தியன் 3 படப்பிடிப்புகள் இன்னும் தொடர்ந்துள்ள நிலையில், கமல் அதற்குள் தக்லைப் படப்பிடிப்பை துவங்க காரணம், விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. அதனால் தேர்தல் பணிகள் குறுக்கிடுவதற்குள் தக்லைப் படத்தை முடித்துவிட திட்டமிட்டுள்ளார்.
அதற்காக வரும் மே மாத இறுதிக்குள் என் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளையும் முடித்து விடுங்கள் என்று மணிரத்னத்திடம் தெளிவாக கூறியிருக்கிறார் கமல்ஹாசன். அதற்கேற்ற வகையில் ஷெட்யூல்களை அமைத்து படப்பிடிப்பு இன்று துவங்கப்பட்டுள்ளது.
தக்லைப் படத்தில் திரிஷா, அபிராமி என்ற இரண்டு நடிகைகள் நடிக்கின்றனர். இதில் விருமாண்டி படத்தில் அபிராமியும், மன்மதன் அம்பு படத்தில் திரிஷாவும் ஏற்கனவே கமலுடன் ஜோடியாக நடித்தவர்கள்தான். அந்த வகையில் இந்த படத்தில் இருவரும் நடிப்பதால், கண்டிப்பாக இருவரில் ஒருவர் கமலுக்கு ஜோடியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியே இல்லை என்ற தகவல் வந்துள்ளது. இந்த படத்தை பொருத்தவரை திரிஷா, அபிராமி வேறு நடிகர்களுக்குதான் ஜோடியாக நடிக்க உள்ளனர். வாணிகணபதி, சரிகா, கவுதமி போன்றவர்களுடன் பல ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்த கமல், இப்போது தனியாக முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார். அதே போல் இந்த படத்திலும் முரட்டு சிங்கிளாக தான் வந்து செல்வார் போலும், இதற்கு முந்தைய படமான விக்ரம் படத்திலும் கமலுக்கு ஜோடி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.





