இசைஞானி இளையராஜா குறித்து தனிப்பட்ட முறையில் பல எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ் சினிமாவில் அவர் இசை சக்கரவர்த்தியாக சாதித்த சாதனைகள் ஏராளம். தமிழ் சினிமாவை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தன் இசையால் ரசிகர்களை தன் வசப்படுத்தியவர். கடந்த 1980, 90களில் ஒரே நாளில் 3 படங்கள், 4 படங்கள் என ரீ ரிக்கார்டிங் முடித்தவர் இளையராஜா.
இளையராஜாவின் இசையில் வந்த 1000வது படம்தான் டைரக்டர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் தன் இசையின் பிரவாகத்தை ஓடவிட்டவர். விழியில் விழுந்து, இதயம் கலந்து, உயிரில் கலந்த உறவாக இளையராஜாவின் இசை, மனிதர்களை சந்தோஷப்படுத்தும். சமாதானமும் செய்யும்.
இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு கதையை எடுக்க முடிவான நிலையில், அந்த கதையில் இளையராஜா கேரக்டரில் நடிக்க இருப்பவர் தனுஷ். அந்த படத்தை நானே தயாரிக்கிறேன் எனக் கூறிய இளையராஜா, இயக்குநரை நானே தேர்வு செய்கிறேன் என்றும் கூறியிருந்தார். இதையடுத்து தன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் ( கர்ணன்) அருண் மாதேஸ்வரன் ( கேப்டன் மில்லர்) ஆகியோரை இளையராஜாவிடம் தனுஷ் அனுப்பி வைத்தார்.
இருவரையும் அமர வைத்து நீண்டநேரம் அவர்களிடம் பேசிய இளையராஜா முடிவில், அருண் மாதேஸ்வரனை தன் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்க சம்மதித்து இருக்கிறார். கேப்டன் மில்லர் போன்ற ஆக்ஷன் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரனுக்கு இந்த வாய்ப்பு கிடைத்திருப்பது, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏனெனில் மாரி செல்வராஜ் இதுபோன்ற படங்களை இயக்குவதில், தன் தனிப்பட்ட திறமை, ஆளுமை தனித்துவத்தையும் வெளிப்படுத்துவார். அருண் மாதேஸ்வரன் எப்படி இளையராஜா கதையை அவரது ஸ்டைலில் சொல்லப் போகிறார் என்பது பலருக்கும் திகைப்பை தந்துள்ளது. என்றாலும், இதற்கு ஒரு சூப்பர் வழியை இளையராஜாவே, அருண் மாதேஸ்வரனுக்கு காட்டியிருக்கிறார். இது சூப்பர் ஐடியாவே இருக்கிறதே என, அவரும் சந்தோஷமாக ஒத்துக்கொண்டுள்ளார்.
அதாவது வரும் 2 மாதங்களுக்கு இளையராஜாவுடன் இருந்து அவரது நேரடி செயல்பாடுகளை அருண் மாதேஸ்வரன் தெரிந்துக்கொள்ள வேண்டும். மேலும், இளையராஜாவே தன் வாழ்க்கை சம்பவங்களை, முக்கிய தகவல்களை சொல்வார். அதை குறிப்பெடுத்துக்கொண்டு அதை வைத்தே ஸ்கிரிப்ட் எழுதி முழுக்கதையை உருவாக்குங்கள் என்று கூறிவிட்டார் இளையராஜா. அப்போது முதல் இளையராஜாவின் நிழலாக மாறியிருக்கிறார் அருண் மாதேஸ்வரன்.





