ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினிகாந்த். வரிசையாக இரண்டு படங்களை தோல்வி படமாக கொடுத்திருப்பதால் இந்தப் படத்தின் மூலம் நிச்சயம் கம்பேக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அப்படி மிஸ் ஆகும்பட்சத்தில் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என ஆணித்தரமாக அவரது ரசிகர்கள் கூறிவிடுவார்கள் என்பதுதான் உண்மை. பீஸ்ட் படத்தின் மூலம் தோல்வி முகத்தையும், ட்ரோலையும் சந்தித்த நெல்சனும் இதன் மூலம் தன்னை நிரூபித்து பதிலடி கொடுக்க காத்திருக்கிறார்.
பான் இந்தியா படமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. நெல்சன் திலீப்குமார் காமெடியாக படத்தை நகர்த்தி செல்வதில் வல்லவர் என்பதாலும்; ரஜினிகாந்த்தும் சிறப்பாக காமெடி செய்யக்கூடியவர் என்பதால் இந்த காம்போ மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஆடியோ வெளியீட்டு விழாவில்கூட நெல்சன் திலீப்குமாரை இறுக்கமாக கட்டி அணைத்து தட்டி கொடுத்தார் ரஜினி. இதனைப் பார்த்த ரசிகர்கள் படம் முழு திருப்தி கொடுத்துவிட்டதுபோல. அதனால்தான் தலைவர் இப்படி சந்தோஷமாக இருக்கிறார் என்றனர் ரசிகர்கள்.
பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்க பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று ஜெயிலர் ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லர் ஆரம்பத்திலேயே ஆக்ஷன் மோட் ஸ்டார்ட் ஆக; வி ஆர் ஃப்ரம் சிபிஐ என சொன்னதற்கு டொனேஷன் வேணுமா என அடுத்த காட்சியே ட்ரெய்லரில் சிரிப்பு வெடியை பற்ற வைத்திருக்கிறார் நெல்சன் திலீப்குமார். அதற்கு அடுத்ததாக வரிசையாக ஆக்ஷன் காட்சிகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. இதனைப் பார்த்த ரசிகர்கள் நிச்சயம் பெரிய ட்ரீட் இருக்கிறது என்று உற்சாகத்தோடு உள்ளனர்.
ட்ரெய்லரில் பல காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் வசந்த் ரவியின் ஷூவுக்கு ரஜினிகாந்த் பாலிஷ் போடும் காட்சி வெகுவாக கவர்ந்துவிட்டது. அந்தக் காட்சியிலும் ரஜினி தனது தனித்துவமான ஸ்டைலை புகுத்தியிருந்தார்.இந்நிலையில் அந்தக் காட்சி குறித்து வசந்த் ரவி சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார் அவர்
வசந்த் ரவி பேசுகையில், “நீங்க போயி உங்க ஷூவை வைக்குறீங்க ரஜினி சார் அதுக்கு பாலிஷ் போடுவார் என நெல்சன் சொன்னார். அப்படி அவர் சொன்னதும் எனக்கு பதறிவிட்டது. என்னது என் ஷூவுக்கு ரஜினி சார் பாலிஷ் போடுகிறாரா என நினைத்துக்கொண்டேன். ஆனால் அந்தக் கேரக்டருக்கு அது தேவைப்பட்டது. அந்தக் காட்சியை எடுப்பதற்கு முன்னர் ஒருமுறை ரஜினி சார் ஒத்திகை பார்த்துக்கொண்டார்.
தனது ட்ரேட் மார்க் ஸ்டைலோடு ஒத்திகையை பார்த்த அவர் சரி ஓகே டேக் போகலாம் என சொல்லிவிட்டு நடித்தார். அது அவ்வளவு அழகாக வந்திருக்கிறது. ஒரு பெரிய நடிகர் என்ற ஈகோ இல்லாமல் அவர் பழகினார். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை இந்தப் படத்தில் கற்றுக்கொண்டேன். ஒருமுறை என்னிடம் இந்தக் கேரக்டரை உங்களை விட்டா வேறு யாராலும் செய்திருக்க முடியாது என பாராட்டினார். அது எனக்கு பெரிய விஷயம்” என்றார்.





