நடிகர் அஜித்குமார் இப்போது குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன் அவர் நடித்து வந்த விடாமுயற்சி படப்பிடிப்பு பாதியில் நின்றுள்ள நிலையில், இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் அஜித் குமார் மும்முரமாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு, 27 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. அதன் பின்பு விடாமுயற்சி படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்கிறார்.
நடிகர் அஜித்குமார் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பது உறுதியாகியுள்ளது. அஜித்குமார் மூன்று வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில், ஒருவருக்கு நயன்தாரா ஜோடியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாராவுக்கு சம்பளமாக 10 கோடி ரூபாய் பேசப்பட்டுள்ள தகவல் உறுதியாகி உள்ளது. ஆனால் இந்த படத்தில் எப்படி நயன்தாரா நடிக்க சம்மதித்தார் என்பதுதான் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
ஏனெனில், கடந்த 2023ம் ஆண்டில், துணிவு படத்தை தொடர்ந்து அஜித்குமார் நடிக்கும் படத்தை இயக்க இருந்தது நயன்தாராவின் கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைத்தான் தனது படத்தை இயக்க அஜித்குமார் முதலில் கமிட் செய்திருந்தார். கதையும் கேட்டு ஓகே சொல்லி இருந்தார்.
ஆனால் ஒரு கட்டத்தில் அவர், விக்னேஷ் சிவன் வேண்டாம் என்று புறக்கணித்துவிட்டு, அவருக்கு பதிலாக மகிழ்திருமேனியை அழைத்து, வாய்ப்பளித்தார். அதன்பின்பு அவரது இயக்கத்தில் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது கணவர் விக்னேஷ் சிவன், டாப் ஸ்டார்களில் ஒருவரான அஜித்குமார் படத்தை இயக்குகிறார். இதனால் முன்னணி இயக்குனராக இமேஜ் உயர்ந்துவிடும் என்ற பெருமையில் இருந்த நயன்தாராவுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது.
நடிகர் அஜித்குமாரிடம் இரண்டு, மூன்று முறை நயன்தாரா போனில் பேசி தன் கணவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்குமாறு அவரிடம் வேண்டுகோள் வைத்தும், அஜித் குமார் அதை நிராகரித்தார். அதனால் ஆத்திரமடைந்த நயன்தாரா, இனிமேல் அஜித்குமார் நடிக்கும் படங்களில் அவருடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா கூறியதாகவும் அப்போது தகவல்கள் வேகமாக பரவியது. இனிமேல் அஜித்குமாருக்கும் நயன்தாராவுக்கும் நிரந்தர பகை நீடிக்கும் என்று சினிமா விமர்சனங்கள் பலர் கூறி வந்தனர்.
இந்நிலையில் இப்போது நயன்தாரா அஜீத்குமாருடன் நடிப்பது உறுதியாகிவிட்டது. ஏற்கனவே பில்லா, ஆரம்பம், ஏகன், விஸ்வாசம் ஆகிய 4 படங்களில் நயன்தாரா அஜித்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். 5வது படமாக குட்பேட் அக்லி படத்தில், பழைய பகையை மறந்து அஜித்குமாருடன் நயன்தாரா ஜோடி சேர்ந்திருக்கிறார். அது மட்டும் இன்றி நயன்தாரா இதில் நடிக்க மறுத்தால், அந்த வாய்ப்பு போட்டி நடிகையான திரிஷாவுக்கு சென்று விடும் என்பதால், இந்த படத்தில் நடிக்க நயன்தாரா ஒத்துக் கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.





