உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய “இந்தியன் 2” திரைப்படமானது மிகப்பெரிய வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இதுவரை கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. வசூல் ரீதியாக ஓரளவு இந்த படம் பணத்தை குவித்து இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு இந்த திரைப்படமானது சிறப்பாக இல்லை என்ற கருத்தே பலரது மத்தியிலும் இருந்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியாகிய “விக்ரம்” படம் மாபெரும் ஹிட் அடித்து கமலுக்கு மிகப்பெரிய கம்பேக் கொடுத்திருந்த வேளையில் தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியான இந்த படமும் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இவ்வேளையில் இந்த படம் அவருக்கு சற்று சறுக்கலையே தந்துள்ளதாக பலரும் பேசி வருகின்றனர். இந்த படத்தை தொடர்ந்து தற்போது கமல் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் “தக் லைப்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து சிம்புவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இன்னும் ஒரு சில மாதங்களில் அந்தப் படம் நிறைவடைய இருக்கும் வேளையில் அந்தப் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும், டப்பிங்கையும் முடித்துக்கொண்டு அவர் அமெரிக்கா செல்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அமெரிக்கா செல்லும் கமலஹாசன் அங்கேயே 90 நாட்கள் தங்கி இருந்து AI தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது சினிமாவில் அதிகமாக AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருவதால் ட்ரெண்டிங்கில் இருக்கும் அந்த தொழில்நுட்பத்தை தானும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே 90 நாள் அங்கு தங்கி கமலஹாசன் அந்த தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள இருக்கிறாராம்.
ஒருவேளை கமலஹாசன் அப்படி 90 நாள் அமெரிக்காவில் தங்கினால் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் “பிக் பாஸ்” நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.





