நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருமே தமிழ் சினிமாவில் மிக உச்சத்தில் இருக்கின்றனர். இருவருமே 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் பெரிய ஸ்டார் நடிகர்களாக உள்ளனர். 70 வயது நெருங்கும் நிலையில் கமலும், 73 வயதுகள் ஆன நிலையில் ரஜினியும் இப்போதும் ஹீரோவாக நடித்து ஜெயித்துக்கொண்டு இருக்கின்றனர்.
ஆரம்ப காலத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒன்றாக பல படங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக கே பாலசந்தர் இயக்கிய படங்களில் கமல், ரஜினி இருவருமே இணைந்து நடித்துள்ளனர். இதில் சில படங்கள் மிகப் பெரிய அளவில் வெற்றிப் படங்களாக இருந்தன. அப்போதே இருவரும் நல்ல நண்பர்களாக இருந்ததால்தான், தொடர்ந்து பல படங்களில் இணைந்து ஈகோ இல்லாமல் நடிக்க முடிந்தது.
16 வயதினிலே, ஆடுபுலி ஆட்டம், நினைத்தாலே இனிக்கும், அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவர்கள், அவள் அப்படித்தான், தப்புத்தாளங்கள், இளமை ஊஞ்சலாடுகிறது. தாயில்லாமல் நானில்லை, உருவங்கள் மாறலாம், தில்லுமுல்லு, அலாவுதீனும் அற்புத விளக்கும் என மொத்தம் 13 படங்களில் ரஜினி, கமல் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். இதில் அபூர்வ ராகங்கள்தான் ரஜினி அறிமுகமான முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கட்டத்துக்கு பிறகு ரஜினி, கமல் இணைந்து நடித்த படங்கள் பெரிய வெற்றிகளை பெற்ற நிலையில், அவர்களுக்கான சம்பளம் உயரவில்லை. தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் நல்ல லாபமடைந்தனர். இதனால் தங்களது தனிப்பட்ட வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்பதை உணர்ந்த இருவரும் இனி தனித்தனியாக நடித்தால்தான், தமிழ் சினிமாவில் நமக்கான மார்க்கெட்டை அடைய முடியும் என இருவரும் ஆலோசித்து பேசி முடிவு செய்து, தனியாக நடித்தனர்.
அவர்கள் நினைத்தது போலவே ரஜினி, கமல் இருவரும் தமிழ் சினிமாவில் தனி தனி சிகரங்களாக உயர்ந்து நிற்கின்றனர். இந்நிலையில், இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க வேண்டும் என்பது ரஜினி, கமல் ரசிகர்களின் நீண்டகால ஆசையாக இருந்து வருகிறது. ஆனால் அப்படிப்பட்ட கதை அமைந்தால் இருவரும் நடிப்போம் என்றே கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இயக்குனர் ஷங்கர், சமீபத்தில் இந்தியன் 2 பிரமோ நிகழ்ச்சியில் பேசிய போது ஒரு தகவலை கூறினார். எந்திரன் படத்தை தொடர்ந்து 2.0 படத்தை எடுத்தேன். இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக, இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடித்திருந்தார். அந்த கேரக்டரில் முதலில் கமலை நடிக்க வைக்க தான் நான் நினைத்தேன். ஆனால் கமல் அப்போது வேறு ஒரு படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்ததால், அவரால் ரஜினியுடன் நடிக்க முடியவில்லை, என்று கூறியிருக்கிறார்.





