தமிழ் சினிமாவில் இசை சக்கரவர்த்தியாக 47 ஆண்டுகளாக கோலோச்சி வருபவர் இசைஞானி இளையராஜா. தமிழ் சினிமாவில் கடந்த 45 ஆண்டு கால வரலாறை, இளையராஜா பெயரை சொல்லாமல் கடந்துவிட முடியாது என்னும் அளவுக்கு, அவரது இசையால் வெற்றி பெற்ற படங்கள் மிக அதிகம். அவரது இசையால் மட்டுமே ஜெயித்த படங்களும் ஏராளம்.
இசைத்துறையில் எந்தளவுக்கு ஞானியாக போற்றப்படுகிறாரோ, இளையராஜா அந்த அளவுக்கு தனிப்பட்ட முறையில் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகி வருபவர் இளையராஜா. குறிப்பாக தலைக்கணம், ஆணவப் போக்கு, மற்றவர்களை மதிக்காத தன்மை போன்ற விஷயங்களில் இளையராஜா அதிக சர்ச்சைகளில் சிக்கியவராக இருக்கிறார்.
குறிப்பாக தனது பிள்ளைகளை கூட உதாசீனப்படுத்தும் குணம் கொண்டவர் இளையராஜா என்பதை அவரது மூத்த மகன் கார்த்திக் ராஜா, ஒரு நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருந்தார். தன் இசை வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உடன் பிறந்த தம்பி கங்கை அமரனையே விரட்டி விட்டவர்தான் இளையராஜா.
அதுமட்டுமின்றி, தேசிய விருதுபெற்ற கவிஞனராய், பாடலாசிரியர் வைரமுத்து வெற்றி பெற்று பெருமை சேர்த்த போது, அதை பார்த்து எரிச்சலடைந்த இளையராஜா, ஒரு கட்டத்தில் தன் இசைக்கு வைரமுத்துவின் பாடல் வரிகளே வேண்டாம் என்று ஒதுக்கியும் விட்டார். இதனால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு 36 ஆண்டுகளாக ஏமாற்றமும், நஷ்டமும் தொடர்கிறது. ஏனெனில் கடலோர கவிதைகள், முதல் மரியாதை, அலைகள் ஓய்வதில்லை போல இன்னும் பல படங்களின் பாடல்கள் இந்த கூட்டணியில் ரசிகர்களுக்கு தித்திக்கும் தேனாக கிடைத்திருக்கும்.
இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தின் ஷூட்டிங் வருகிற அக்டோபரில் துவங்க, தனுஷ் கால்ஷீட் கொடுத்திருந்தார். ஆனால் இன்னும் சில மாதங்கள் படப்பிடிப்பு தள்ளிப் போகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சிக்கலுக்கு காரணம், படத்தை 2 பாகங்களாக எடுப்பதுதான் இதில் முதல் பாகம் பண்ணைபுரம் துவங்கி, இளையராஜா சென்னை வரும் வரை, 2ம் பாகம் பஞ்சு அருணாசலத்தை சந்திப்பதில் துவங்கி, சமகாலம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
சங்கராச்சாரியர் ஒருமுறை இளையராஜாவை சந்தித்த போது, தனது கனவில் வந்த கடவுள், அடிக்கடி இடிந்துவிழும் ஸ்ரீரங்கம் கோபுரத்தை இளையராஜாவை வைத்து கட்டச் சொன்னதாக கூறியுள்ளார். உடனே அதை இளையராஜா நிறைவேற்றியதால் வாழும் சங்கராச்சாரியர் என்று இளையராஜாவை சுற்றியுள்ளவர்கள் கூறுவது வழக்கம். இந்த சம்பவமும் அந்த படத்தில் வர வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் வைரமுத்து, இளையராஜா நட்பு, பாடல்கள் இந்த வரலாறு படத்தில் வருமா, பஞ்சாயத்து தீருமா என்பதிலும் சந்தேகம் நீடிக்கிறது.





