நடிகர் விஜய் நடிப்பில் வருகிற செப்டம்பர் 5ம் தேதி தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் ரிலீஸாகிறது. அதற்கு முன்னதாக 2 தினங்களுக்கு முன் அந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. தி கோட் டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் 35 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 1.6 மில்லியன் லைக் கிடைத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவக்கி உள்ள நடிகர் விஜய், இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க திட்டமிட்டுள்ளார். இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் விஜய் 69 படத்தில் நடிக்கும் விஜய், அத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு முழுநேர அரசியல்வாதியாக மாறி, வருகிற 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார்.
மதுரை, திருச்சி என பல இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை நடத்த இடம் தேடி வந்த நிலையில், இறுதியாக விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் வருகிற செப்டம்பர் மாதம் 22ம் தேதி அரசியல் மாநாடு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாநாட்டில்தான் கட்சிக்கொடி மற்றும் கட்சியின் முக்கிய கொள்கைகள், கோட்பாடுகள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது.
ஆனால் இப்போது வருகிற 22ம் தேதி பனையூரில் தனது தவெக கட்சியின் கொடியை விஜய் அறிமுகம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் நடிகர் விஜய், வருகிற 22ம் தேதி தனது கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி கொடியேற்ற இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இன்று பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்துக்கு வந்த நடிகர் விஜய், ஒத்திகை நிகழ்ச்சியாக அங்குள்ள கட்சிக்கொடி கம்பத்தில் தனது கட்சி கொடியை ஏற்றி ஒத்திகை பார்த்திருக்கிறார். மஞ்சள் நிற கொடியில் நடுவில் விஜய் உருவம் பொறிக்கப்பட்டு அந்த கட்சிக்கொடி வடிவமைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இதுதான் கட்சியின் உண்மையான கொடியா, அல்லது கொடியேற்ற நிகழ்ச்சிக்காக சாம்பிளாக இந்த கொடியை விஜய் ஏற்றினாரா என்பது தெரியவில்லை. ஆனால் வருகிற 22ம் தேதி அவர் அதிகாரபூர்வமாக ஏற்றுகிற கொடிதான் கட்சி கொடியாக இருக்கும். மேலும் அன்று தனது கட்சியின் கொள்கை பாடல் ஒன்றையும் விஜய் வெளியிடுகிறார். இந்த பாடலை பாடலாசிரியர் பா விஜய் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





