தமிழ் சினிமாவில் தற்போது இரண்டாவது ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார் நடிகர் அர்ஜுன். 90களில் பிரபலமான அர்ஜுன், ரசிகர்களுக்காக கொடுத்த வெற்றி படங்கள் ஏராளம். குறிப்பாக அவரது ஜெய்ஹிந்த் திரைப்படத்தை மக்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.
ஆண்டுதோறும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் வந்து விட்டால் போதும், ஜெய்ஹிந்த் திரைப்படத்திலிருந்து தாயின் மணிக்கொடி பாடல் ஒலிக்காத இடத்தையே நம்மால் பார்க்க முடியாது. இது மட்டுமல்லாமல் அவரது முதல்வன் திரைப்படமும், மிகப்பெரிய வெற்றியைப் பெற்று அர்ஜுனுக்கு திருப்புமுனையை கொடுத்தது.
சங்கர் இயக்கத்தில் வெளியாகியிருந்த அந்த திரைப்படத்தில் ஒரு நாள் முதல்வர் என்ற கான்செப்டை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட திரைக்கதை தான் இதன் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. தொடர்ந்து ரிதம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் அர்ஜுன் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் சிறிய இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் திரைப்படங்களில் தலைக்காட்ட தொடங்கி இருக்கிறார். ஆனால் இந்த முறை அர்ஜுன், ஹீரோவாக இல்லாமல் வில்லனாக வலம் வருகிறார். இரும்புத்திரை திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடித்து மிரட்டிய அவர், லியோ திரைப்படத்திலும் விஜய்க்கு சித்தப்பாவாக நடித்திருந்தார்.
தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் அர்ஜுன். படத்தில் அஜித்தின் மனைவியாக நடிக்கும் த்ரிஷாவை அவர் கடத்துவது போல் கதை நகர்வதாக கூறப்படுகிறது. இதனிடையே நடிப்பு மட்டுமல்லாமல், மீண்டும் இயக்கத்தில் அர்ஜுன் கவனம் செலுத்த ஆரம்பிக்கப் போகிறார்.
2022 ஆம் ஆண்டு வெளியான ஏழுமலை திரைப்படத்தை, அவர்தான் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் அந்த சமயத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தற்போது அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை அர்ஜுன் இயக்க உள்ளார். தனது மருமகன் உமாபதியை தான் இதில் அவர் கதாநாயகனாக நடிக்க வைக்கிறார். அர்ஜுனே தயாரிக்கப் போகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.





