ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தை தயாரித்தது. தி கோட் படம் கடந்த 5ம் தேதி ரிலீசானது. இந்த படம் கடந்த ஐந்து நாட்களில் மொத்தம் 300 கோடி ரூபாயை கடந்து வசூல் சாதனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் 102 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது.
படம் ரிலீஸ் ஆன கடந்த 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை, 4 நாட்கள் வசூல் நிலவரம் குறித்து ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் சார்பில், எக்ஸ் பக்கத்தில் 288 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுவாக விஜய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு இருப்பதால், அவரது படங்கள் ரிலீஸான சில நாட்களிலேயே நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களை வசூலில் தாண்டி விடுவது வழக்கமானதாக இருந்து வருகிறது. குறிப்பாக கடந்தாண்டில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படம் 650 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்ததாக கூறப்பட்டது.
ஆனால் அந்த படத்தில் இரட்டை பிறவி, நரபலி போன்ற மூடநம்பிக்கை விஷயங்களை சொன்னதால் படம் பிளாப் என்று கூறப்பட்ட நிலையில், 650 கோடி ரூபாய் வசூல் என்பது பொய்யான கணக்கு என்று ரசிகர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்தது. விஜய் படத்தின் வசூல் நிலவரத்தை குறைத்து சொன்னால் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பும், ஆதரவும் இல்லாமல் போய்விடும் என்பதால் வசூலை அதிகரித்து கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதேபோல் இப்போது வெளியாகியுள்ள தி கோட் படமும் 5 நாட்களில் ரூ. 300 கோடியை மிகப்பெரிய வசூலை கடந்திருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் தி கோட் படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி செய்யவில்லை குறிப்பாக ஏற்கனவே வெளிவந்த ராஜதுரை படம், ஜெமினி மேன் படங்களில் காப்பிதான் இது என்றும் நெகடிவ் விமர்சனமும் உள்ளது.
சமீபத்தில் ஒரு நேர்காணல் பங்கேற்ற இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரிடம், தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கோடிக்கணக்கில் படங்களின் வசூல் விவரங்களை வெளியிடுவது குறித்து நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது அதற்கு அவர், அதெல்லாம் ஐஸ் வைக்கிற வேலை. நாளை அடுத்த படத்துக்கு கால்ஷீட் கிடைக்காது என்பதால் அப்படி சொல்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் ஹீரோக்களின் ரசிகராகி விடுவதே இதுபோல நடப்பதற்கு காரணம் என கூறியிருக்கிறார். தி கோட் படம் வசூல் குறித்து அவர் சொன்னதாக இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.





