வாழ்க்கையில் இன்று ஜெயித்து உச்சத்தில் இருக்கும் பலர், அவர்களது ஆரம்ப காலத்தில் மிக சாதாரணமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்கள். அப்போது சக மனிதர்கள் அவர்கள் காயம்பட்டு இருப்பார்கள். பலவிதமான அவமானங்களை சந்தித்து இருப்பார்கள். இது பல வெற்றியாளளர்களின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடிக்க வந்த ஆரம்பத்தில் புதுமுக நடிகராக இருந்த போது தயாரிப்பாளர் ஒருவர் ரஜினியை உதாசீனப்படுத்தி வெளியே அனுப்பி இருக்கிறார். பஸ்சுக்கு கூட கையில் காசின்றி ரோட்டில் நடந்து சென்ற அவலத்தை ரஜினியே ஒருமுறை மேடையில் பகிரங்கமாக சொல்லியிருக்கிறார்.
அதே போல் நடிகர் விஜய் நடிக்க வந்த புதிதில், தியேட்டரில் படம் பார்த்து விட்டு வந்த சிலர் இது எல்லாம் ஒரு முகமா என்று கேலி பேசியதை பார்த்து அவரே வேதனைப்பட்டிருக்கிறார். நடிகர்கள் மட்டுமில்லை, சொந்த வாழ்க்கையில் பல துறைகளில் இதுபோன்ற அவமானங்களை சந்தித்த வெற்றியாளர்கள் ஏராளமாக உள்ளனர்.
அந்த வகையில் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கும் அவர் சினிமா துறைக்கு வந்த ஆரம்ப காலத்தில் ஒரு மோசமான சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த 1964ம் ஆண்டில் வெளிவந்த படம் சர்வர் சுந்தரம். கே பாலசந்தர் இயக்கத்தில் நாகேஷ் முத்துராமன் நடித்த இந்த படத்தின் விநியோகஸ்தர்கள் காட்சி ஏவிஎம் ஸ்டுடியோவில் திரையிடப்பட்டுள்ளது.
இந்த காட்சியைப் பார்க்க பலர் ஏவிஎம் அலுவலகம் சென்றார்கள். அங்கு பாரதிராஜாவும் தனது நண்பர் ஒருவருடன் படம் பார்க்க சென்றிருக்கிறார். அங்கிருந்த சிலர் பாரதிராஜாவை பார்த்து யார் என்று விசாரிக்க, பாரதிராஜா தன்னை அழைத்துச் சென்ற நண்பரை கை காட்டி இருக்கிறார். ஆனால் அந்த நபரோ பயத்தில், இவர் யார் என்று எனக்கு தெரியாது என்று பயத்தில் பொய் சொல்லியிருக்கிறார்.
அதன்பிறகு பாரதிராஜாவின் சட்டையை பிடித்து ஏவிஎம்மில் இருந்து வெளியே தள்ளி விட்டிருக்கிறார்கள். வேதனை அவமானத்தோடு கலங்கிய கண்களோடு, ஒரு நாள் இந்த கம்பெனி என்னை கூப்பிடும் அளவுக்கு என்னுடைய ஆற்றலை திறமையை நான் வளர்த்துக் கொண்டு வருவேன் என அந்த வாசலில் நின்று பாரதிராஜா சபதம் ஏற்றிருக்கிறார். அதன்படி 1984ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புதுமைப்பெண் படத்தை ஏவிஎம் நிறுவனம்தான் தயாரித்து இருந்தது. தனது சவாலை ஜெயித்து காட்டியவர்தான் இந்த இயக்குனர் இமயம்.





