தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். செல்லமே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் விஷால், தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்தார். குறிப்பாக சண்டக்கோழி, திமிரு, மருது, அவன் இவன், துப்பறிவாளன், தோரணை, மலைக்கோட்டை, பூஜை, தாமிரபரணி உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தார்.
இதில் நடிகர் விஷாலுக்கு மிகப்பெரிய அடையாளத்தையும், வெற்றியையும் பெற்றுத் தந்த படம் துப்பறிவாளன். இந்த படத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கியிருந்தார். துப்பறிவாளன் படத்தில் பிரசன்னா, ஆண்ட்ரியா, வினய்குமார், கே பாக்யராஜ், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களின் நடித்திருந்தனர். படம் பெரிய வெற்றியை பெற்றது.
இதையடுத்து துப்பறிவாளன் படத்தின் 2ம் பாகத்தை எடுக்க நடிகர் விஷாலும் இயக்குனர் மிஷ்கினும் முடிவு செய்த நிலையில், லண்டனில் துப்பறிவாளன் 2 படத்தின் சூட்டிங் ஒரு மாதம் வரை நடந்தது. ஆனால் படப்பிடிப்பில் விஷால், மிஷ்கின் இருவருக்கும் மேற்பட்ட கருத்து வேறுபாடு, மோதல் காரணமாக படப்பிடிப்பு பிரேக்கப் ஆனது.
அதன் பிறகு மிஷ்கினும் விஷாலும் ஒருவரை ஒருவர் கடுமையாக பொது இடங்களில் விமர்சித்து பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூழலில் துப்பறிவாளன் 2ம் பாகத்தை நானே இயக்கி நடிக்க போகிறேன் என்று அப்போதே நடிகர் விஷால் அறிவித்தார். ஆனால் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்த விஷால், துப்பறிவாளன் 2 படத்தை துவங்கவில்லை.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துப்பறிவாளன் 2 படத்தை துவங்க விஷால் திட்டமிட்டார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் வெற்றியைத் தொடர்ந்து, துப்பறிவாளன் 2 படத்தை இயக்க விஷால் தயாரானார். லண்டன் சென்று லொகேஷன் பார்த்து வந்தார். படத்தில் நடிக்க வேண்டிய மற்ற நடிகர், நடிகைகள் குறித்தும் ஆடிஷன் நடந்தது. ஆனால் துப்பறிவாளன் 2 படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன்வராததால் படப்பிடிப்பு துவங்கப்படாமல், அப்படியே நின்று போனது.
இதற்கிடையே தற்போது துப்பறிவாளன் 2 படத்தை இயக்க நடிகர் விஷால் தயாராகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. துப்பறிவாளன் 2 படத்தில் திரைக்கதையில் சில மாற்றங்களை செய்திருக்கிறார் நடிகர் விஷால். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை வருகிற டிசம்பர் மாதத்தில் துவங்க விஷால் திட்டமிட்டுள்ளார். லண்டன், மலேசியா, அஜர்பைஜான் போன்ற நகரங்களில் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





