கடந்த 1996ம் ஆண்டில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் இந்தியன். இதில் கமல்ஹான் சந்திரபோஸ் என்ற கேரக்டரில் மகனாகவும் சேனாபதி என்ற கேரக்டரில் அப்பாவாகவும் நடித்திருந்தார். இந்தியன் தாத்தாவாக நடித்த கமலுக்கு சிறந்த நடிகர் தேசிய விருதும் இந்த படத்தில் கிடைத்தது. இந்தியன் படமும் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்திருந்தது.
இதையடுத்து 28 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்குனர் ஷங்கர் டைரக்டர் செய்திருந்தார். கடந்தாண்டில் வெளியான இந்தியன் 2 படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இந்த படம் எடுக்கும் போதே இந்தியன் 3 படத்தையும் ஷங்கர் அடுத்த பாகமாக எடுத்து முடித்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்னும் ஒரு மாத படப்பிடிப்பு ரீ ஷூட் செய்யப்பட வேண்டி இருக்கிறது.
இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்கள் என 2 பாகங்களையும் தயாரித்திருப்பது லைகா புரடக்சன்ஸ் நிறுவனம்தான். இந்தியன் 2 பலத்த நஷ்டத்தை தந்த நிலையில் இந்தியன் 3 படம் வெளியானால் நஷ்டத்தை சமாளிக்கலாம், ஒரு வேளை இந்தியன் 2 படம் போல இல்லாமல் இந்தியன் 3 மாபெரும் வெற்றிப் படமாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்தியன் 3 படப்பிடிப்பை துவங்குவதில் இயக்குனர் ஷங்கர் நடிகர் கமல் இருவருமே ஆர்வமின்றி உள்ளனர். சமீபத்தில் லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தனது நெருங்கிய நண்பர் என்பதால், இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஷங்கர் வீட்டுக்கே நேரில் சென்று பேசியிருக்கிறார். விரைவில் இந்தியன் 3 படத்தை முடித்துவிடவும் ஷங்கரிடம் கூறியிருக்கிறார்.
அதனால் தனது கண்டிஷன்களையும் எல்லாம் கொஞ்சம் தளர்த்திக்கொண்ட இயக்குனர் ஷங்கர், இன்னும் 15 நாட்கள் மட்டுமே ரி ஷூட்டிங் நடத்தும் முடிவுக்கு வந்திருக்கிறார். வரும் டிசம்பரில் இந்தியன் 3 படத்தை ரிலீஸ் செய்யலாம் என்றும் திட்டமிட்டு அதற்கான பணிகளை துவங்கியிருக்கிறார்.
ஆனால் படத்தின் நாயகன் கமல்ஹாசன் தரப்பில்தான் எந்தவிதமான ரியாக்ஷனும் இல்லை. இந்தியன் 3 என்ற ஒரு படத்தில் நடித்ததற்கான அறிகுறியோ ஞாபகமோ அவருக்கு சுத்தமாக இல்லை என்ற தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கமல் இப்போதைக்கு எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் இந்தியன் 3 படத்தை முடித்து வெளியிட வசதியாக, இயக்குனர் ஷங்கருக்கு அவர் ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.





