தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நடிகர் விஜய் இப்போது தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பரபரப்பான ஒரு அரசியல் தலைவராக மாறியிருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவராக அவர் வருகிற 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் ஆர்வத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
அரசியலில் நடிகர் விஜய்க்கு இருந்து வரும் அதே ஆதரவும் வரவேற்பும் சினிமாவில் அவருக்கு தொடர்ந்து இருந்து வரும் நிலையில்தான் அவர் சினிமாவை விட்டுவிட்டு அரசியல் களத்துக்கு வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை விஜய் 68 படங்களில் நடித்திருக்கிறார்.
வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் ஜனநாயகன் படம்தான் விஜயின் 69வது படமாகும். இதுவே தனது கடைசி படமாக இருக்கும் என்று நடிகர் விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டார். மேலும் நாளை மலேசியாவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அதற்காக நடிகர் விஜய் இன்று விமானத்தில் மலேசியா புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து நடிகை நமீதா பேசியிருக்கிறார். இவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக அழகிய தமிழ் மகன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இரட்டை வேடங்களில் விஜய் நடித்திருந்தார். அதில் ஒரு விஜய்க்கு ஸ்ரேயாவும் மற்ற ஒரு விஜய்க்கு நமீதாவும் ஜோடியாக நடித்திருந்தனர். சமீபத்தில் தேனியில் நடந்த விழா ஒன்றில் நடிகை நமீதா கலந்துக்கொண்டார். அவர் பாஜக கட்சியிலும் முக்கிய நிர்வாகியாக உள்ளார்.
அப்போது நமீதாவை செய்தியாளர்கள் சந்தித்து பேசினர். அப்போது நடிகர் விஜய் அரசியல் குறித்து நடிகை நமீதாவிடம் கேட்கப்பட்டது. அப்போது நடிகை நமீதா கூறியதாவது, நடிகர் விஜய் போல மிக அழகாக டான்ஸ் ஆடுபவர்கள் மிகவும் குறைவுதான். டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவா தெலுங்கு சினிமாவில் ஜூனியர் என்டிஆர் சிறந்த டான்ஸர்களாக உள்ளனர்.
அவர்கள் 2 பேருக்கு பிறகு தமிழ் சினிமாவில் விஜய்தான். என்னை பொருத்தவரை நடிகர்களில் அவர்தான் மிகச்சிறந்த டான்ஸ் கலைஞர் விஜய்தான். அரசியலுக்கு வந்த பிறகு சினிமாவை விட்டு விஜய் விலகினால் நிச்சயமாக அவரது நடிப்பு, நடனம் அனைத்தையும் சினிமாவில் மிஸ் செய்வோம் என்று நடிகை நமீதா கூறியிருக்கிறார்.





