தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை நமீதா. பில்லா அழகிய தமிழ்மகன் ஏய் புலி முருகன் நான் அவன் இல்லை ஆணை எங்கள் அண்ணா வியாபாரி பொட்டு பச்சக்குதிர இங்கிலீஸ்காரன் பம்பர கண்ணாலே என பல படங்களில் நமீதா நடித்திருக்கிறார்.
நமீதா பெரும்பாலான படங்களில் கவர்ச்சி நாயகியாக நடித்திருக்கிறார். குறிப்பாக சாணக்யா படத்தில் நடிகர் சரத்குமாருடன் அர்ஜூனா அர்ஜூனா என்ற பாடல் காட்சியில் அவரது கவர்ச்சி நடனம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் காட்சியில் விருப்பமே இல்லாமல் அப்படி நடித்ததாக நடிகர் சரத்குமார் சமீபத்தில் கூறியிருந்தார்.
சினிமாவில் பல படங்களில் நடித்த அவர் ஒரு காலகட்டத்தில் இமேஜ் சரிவடைந்ததால் படங்களில் வாய்ப்பு குறைந்தது. பிறகு தெலுங்கு மலையாளம் என பிற மொழி படங்களிலும் நமீதா நடித்தார். எனினும் பழையபடி சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை. இந்த சூழலில் அரசியல் பக்கம் அவரது கவனம் திரும்பியது.
நடிகை நமீதாவுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த பல ஆண்டுகளாகவே அவர் நடிக்கவில்லை. ஆரம்பத்தில் தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது அதிமுக ஆதரவாளராக அவர் இருந்தார். அதன்பிறகு அவர் சமீபகாலமாக பாஜகவில் இருந்து வருகிறார். பாஜக பொதுக்கூட்டங்களில் கலந்துக்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தேனியில் நடந்த ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் நடிகை நமீதா சில தினங்களுக்கு முன்பு கலந்து கொண்டார். அப்போது நமீதா கூறியதாவது, மீண்டும் சினிமாவில் நடிக்க வருவதற்கு எனக்கு விருப்பம் தான். ஆனால் படையப்பா படத்தில் நீலாம்பரி கேரக்டர் போல காலம் கடந்தும் நம்மைப் பற்றி பேச வைக்கும் படமாக, கேரக்டராக அது இருக்க வேண்டும்.
பாலிவுட் நடிகைகள் வித்யா பாலன், ராதிகா ஆப்தே போன்றவர்கள் அருமையான கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கிறார்கள். அவர்களை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு அதுபோன்ற சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க விரும்புகிறேன் என்று நடிகை நமீதா கூறியிருக்கிறார்.





