நடிகர் சத்யராஜ் திமுக தேர்தல் பிரசார கூட்டங்களில் தவெக தலைவர் விஜய்க்கு எதிராக பேசி வருகிறார். அவரது மகள் திவ்யா சத்யராஜ் திமுகவில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். ஆனால் சத்யராஜ் மகன் சிபிராஜ் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்டு வருகிறார். மேலும் விஜய்க்கு அவர் இப்போது எழுதியுள்ள ஒரு கடிதமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த கடிதத்தில் நடிகர் சிபிராஜ் கூறியிருப்பதாவது, அன்புள்ள விஜய் அண்ணாவுக்கு 1993 அக்டோபர் 3ம் தேதி அன்று தான் நான் உங்களை முதன் முதலாக சந்தித்தேன். பொள்ளாச்சி ஹோட்டல் மொட்டை மாடியில் அப்பாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள எஸ்ஏ சி மற்றும் விஜயகாந்த் ஆகியோருடன் நீங்களும் வந்திருந்தீர்கள்.
அந்த எளிமையான இளைஞன் எதிர்காலத்தில் என் இதயம் உட்பட கோடிக்கணக்கான இதயங்களை வென்று ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுப்பார் என்று அப்போது எனக்கு தெரியாது. நீங்கள் இனி நடிக்கப் போவதில்லை என்ற உண்மையை எங்களால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும் ஒரு ரசிகனாக நடிகனாக சகோதரனாக மற்றும் நண்பனாக உங்கள் புதிய பாதைக்கான முடிவை மதிக்க வேண்டியது அவசியம்.
நான் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பேன். உங்களது வெற்றிகளை எனது சொந்த வெற்றியைப் போலவே நான் ரசித்து கொண்டாடினேன். கடந்த காலங்களில் உங்களுடன் நான் செலவிட்ட தனிப்பட்ட தருணங்கள் உணவு சாப்பிட்டது போன் செய்தாலோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பினாலோ நீங்கள் உடனடியாக அளிக்கும் பதில்கள் இவை அனைத்து என் வாழ்வில் போற்றத்தக்க நினைவுகள்.
நான் சினிமா பின்னணியில் இருந்து வந்தாலும் நான் சினிமா உலகுக்குள் நுழைய நீங்களே உந்துதலாக இருந்தீர்கள். உங்கள் படங்கள் பொழுதுபோக்காக பார்க்கப்பட்டாலும் அவை எனக்கு உண்மையான அன்பு நட்பு தன்னம்பிக்கை சுயமரியாதை முடிவெடுக்கும் திறனை கற்றுக் கொடுத்தன.
ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேனா என் பேச்சை நானே கேட்க மாட்டேன் – இது வெறும் சினிமா வசனம் மட்டுமல்ல. நீங்கள் வாழும் தத்துவம் என்பதையும் எங்களை அவ்வாறு வாழத் தூண்டும் மந்திரம் என்பதையும் பல ஆண்டுகளாக நாங்கள் உணர்ந்துள்ளோம் என்று நடிகர் சிபிராஜ் அந்த கடிதத்தில் கூறியிருக்கிறார். அப்பா சகோதரி திமுக ஆதரவாளர்களாக திமுக சார்ந்தவர்களாக உள்ள போது சிபிராஜ் மட்டும் விஜய் ஆதரவாளராக இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை தந்துள்ளது.





