நாட்டில் மக்களுக்கு எத்தனையோ பிரச்னைகள் இருந்தாலும் முதல்வர் விஜயுடன் நடிகை திரிஷா உள்ள அந்த கேக் வெட்டும் புகைப்படம் உண்மையானதுதானா என்பதுதான் இப்போதைக்கு மிகப்பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. தமிழக முதல்வர் விஜய் கடந்த 22ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
பிரதமர் நரேந்திர மோடி முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். ஆனால் நடிகை திரிஷா அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் முக்கிய பேசுபொருளாக அன்று மாறியது. விஜயை அவர் தனது வலைதள பக்கத்தில் அன்பாலோ செய்துவிட்டார் என்றும் ஒரு தகவல் வைரலானது.
ஆனால் பிறந்த நாளன்று வாழ்த்து தெரிவிக்காத திரிஷா மறுநாள் தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடர் நிறைவடைந்த பிறகு அவர் விஜயுடன் கேக் வெட்டும் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்துகள் தெரிவித்திருந்தார். எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாக்கும் சிறந்த நபருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று அதில் திரிஷா தெரிவித்திருந்தார்.
மேலும் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்ததை குறிக்கும் வகையில் 00:00 என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் நடிகை திரிஷா விஜயின் புகைப்படம் ஏஐ என்று ஒரு தரப்பினரும் பழைய புகைப்படம் என்று ஒரு தரப்பினரும் இணையத்தில் கருத்துக்களை தெரிவித்தனர். நடிகை திரிஷா பதிவு செய்த விஜயின் புகைப்படத்தின் உண்மை தன்மையை ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒரு தரப்பினர் இதுகுறித்து ஏஐ தொழில்நுட்ப புகைப்படம் என்று கருத்து தெரிவித்த நிலையில், இது பழைய புகைப்படம் 2024ம் ஆண்டில் இதே போன்ற ஒரு சட்டையை விஜய் அணிந்திருந்தார் என்றும் ஒரு தரப்பினர் விவாதம் செய்து வருகின்றனர். ஆனால் பழைய புகைப்படம் என்பதை மறுக்கும் வகையில் திரிஷா வெளியிட்ட புகைப்படத்தில் உள்ள செல்போன் 2025ம் ஆண்டில் வெளியானது என்றும் சிலர் விளக்கம் கூறியுள்ளனர். மேலும் நடிகை திரிஷா பகிர்ந்த புகைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் கேக்குகளும் இது விவாதப் பொருளாக மாறி உள்ளது.
இத்தாலி வகை இனிப்பான டிராமிசு எனப்படும் 3 சிறிய வகை கேக்குகளும் மேங்கோ மற்றும் ஸ்ட்ராஃபெரி வகை 2 பெரிய கேக்குகளும் அந்த டேபிளில் வைக்கப்பட்டிருந்தது. அந்த டிராமிசு கேக்குகள் ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான குறிப்பிட்ட ஒரு கடையில் மட்டுமே கிடைக்கும் என்றும் கூறுகின்றனர். அதனை எப்படி ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு திரிஷா கொண்டு வந்தார் என்றும் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். ரசிகர்களின் இந்த சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் நடிகை திரிஷா தரப்பில் இருந்து எந்த விளக்கமும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





