முன்னாள் நடிகர் இன்றைய தமிழக முதல்வர் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன். கடந்த ஜனவரி மாதமே திரைக்கு வர வேண்டிய இந்த படம் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தடைகளை கடந்து ஆறு மாதங்கள் தாமதமாக கடந்த ஜூலை 23ம் தேதி தான் திரைக்கு வந்தது.
ஆனால் சில மாதங்களுக்கு முன்பே இந்த படம் இணையத்தில் எச் டி தரத்தில் லீக் ஆகி விட்டது. ஏராளமானோர் இந்த படத்தையும் அப்போதே பார்த்தும் விட்டனர். அது மட்டும் இன்றி இந்த படத்துக்கு சென்சார் தரப்பில் ஏ சான்றிதழ் தரப்பட்டதால் ஃபேமிலி ஆடியன்ஸ் இந்த படத்தை பார்க்க முடியாது என்ற ஒரு சிக்கலான சூழலில்தான் ஜனநாயகன் திரைக்கு வந்தது.
இந்த படம் வெளியாகும் முன்பும் வெளியான பிறகும் பல்வேறு சவால்களை சந்தித்த நிலையில் திரைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே ஜனநாயகன் படம் சட்டவிரோதமாக இணையத்தில் மீண்டும் வெளியானது. எனினும் விஜயின் கடைசி படம் என்பதால் தியேட்டர்களில் ரசிகர்களின் பலத்த ஆதரவும் கிடைத்தது.
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட மற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் ஜனநாயகன் படத்திற்கு சிறப்பான வரவேற்பு விஜய் ரசிகர்களிடம் கிடைத்தது. படம் வெளியான முதல் நாளிலேயே உலக அளவில் 80 கோடி ரூபாய்க்கு அதிகமான வசூலை எட்டியது. தற்போது ஜனநாயகன் படம் வெளியாகி 11 நாட்கள் கடந்த நிலையில் உலகளவில் இந்த படம் 295.92 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அதனால் மிக விரைவில் 300 கோடி ரூபாய் வசூலை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இந்தியாவில் மட்டும் 204 கோடி வெளிநாடுகளில் 90 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆன சில தினங்களிலேயே தியேட்டர்களில் போதிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இல்லை. பெரும்பாலான தியேட்டர்களில் காற்று வாங்குகிறது என்று தகவல் வெளியானது.
மேலும் கர்நாடகாவில் காவிரி நதி நீர் பிரச்சனையால் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆன தியேட்டர்களில் கன்னட அமைப்பை சேர்ந்த போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால் படக்காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. விஜயின் போஸ்டர்களும் கிழிக்கப்பட்டன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஜனநாயகன் படம் 11 நாட்களில் உலகளவில் 300 கோடி ரூபாய் வசூலை எட்டியிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.





