தமிழ் சினிமாவில் இசை சக்ரவர்த்தியாக 50 ஆண்டுகளாக இருந்து வருபவர் இசைஞானி இளையராஜா. இசையில் மட்டுமின்றி ஆன்மீகத்திலும் அவர் அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர். நடிகர் ரஜினிகாந்த், இளையராஜாவை சாமி என்று அழைக்கும் அளவுக்கு பக்தியில் சிறந்தவராக இசைஞானி இருந்து வருகிறார்.
குறிப்பாக ஆன்மிக தேடல் மிக்கவராக இளையராஜா, மாதந்தோறும் திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் சென்று வருகிறார். ரமண மகிரிஷி ஆசிரமத்தில் தங்கி ஆன்மிக பயிற்சிகளில் ஈடுபடுகிறார். தன்னை உணர்தல் தன்னை அறிதல் என ஆன்மிகம் சார்ந்த ஒரு பாதையில் அவரது வாழ்க்கை பயணத்தை நீண்டகாலமாக தொடர்ந்து வருகிறார்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இசைஞானி இளையராஜா பங்கேற்று இருந்தார். அப்போது மேடையில் இருந்த இளையராஜாவின் இளைய மகன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இசைஞானியிடம் கேள்விகள் கேட்டார். அப்போது கடவுளை நீங்கள் நேரில் பார்த்தால் என்ன கேள்வி கேட்பீர்கள் என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.
அதற்கு இளையராஜா பதில் கூறியதாவது, கடவுளை நான் எப்போ பார்க்கலே? அவரை நான் கேட்க வேண்டிய கேள்வியே கிடையாது. அவர் என்னை நடத்தீட்டு போறார். நான் போயிட்டு இருக்கேன். அவர் எனக்கு ரொம்ப கஷ்டம் கொடுக்கிறார் என்றால், ஆஹா எனக்கு நீ கஷ்டம் கொடுக்கறதுல சந்தோஷப்படறியா?
எவ்வளவு கஷ்டம் வேணா கொடுய்யா. நீ சந்தோஷமாக இருக்கே இல்லே? அப்புறம் வேற என்ன எனக்கு வேணும்? அப்படீன்னு சொல்லிடுவேன். கடவுளை பார்க்கறது எல்லாம் யுவன் நீ அறியாதது இல்லே. நமக்கு உள்ளே இல்லாத கடவுள் வெளியே எங்கே இருக்கப் போகிறார்? நம்ம ஒருவருக்குள்ளும் மனசுக்குள் கடவுள் இருக்கிறார்.
நம்ம மனசுதான் கடவுள். இதை நாம பார்க்க முடியாது. கடவுள் என்ன எந்திரிச்சு காணக்கூடிய விஷயமாகவா இருப்பார்? நமக்கு அறிவு இருக்குதுன்னு தெரியுது. அது கண்ணால் காணக்கூடிய பொருளா அது? அறிவே நம் கண்ணால் காண முடியாத ஒரு பொருளாக இருக்கும் போது அறிவால் அறியப்படக் கூடிய இறைவன் வந்து நமது கண் எதிரே தோற்றம் அளிக்க வேண்டும் என்பது அது கமல்ஹாசன் கேட்பதை போல இருக்கிறது என்று இளையராஜா கூறியிருக்கிறார்.





