இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த பத்தா படம் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் சீதக்காதி போன்ற படங்களில் விஜய் சேதுபதி நடித்த நிலையில் 3வது முறையாக இந்த கூட்டணி மீண்டும் இணைந்து பத்தா படத்தை தந்துள்ளது.
இந்த படத்தில் கதாநாயகியாக லிஜோ மோல் நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல கவனம் கிடைத்துள்ளது. டைரக்டர் அட்லி தயாரிப்பில் சாய் அபயங்கர் இசையில் உருவாகி உள்ளது. இந்த நிலையில் சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் வீடியோ ஒன்றில் பத்தா படம் குறித்து கூறியதாவது, இந்த படத்தில் வித்தியாசமான கதைக்களத்தை எடுத்திருக்கிறார்கள். இருப்பினும் முதல் பாதி ரொம்பவே மெதுவாக போகிறது.
விஜய் சேதுபதி ஒரு ரூமுக்குள் மாட்டிக் கொண்டது மாதிரியான போர்ஷன் வரும். அதை பார்க்கும் போது பெரிதாக ஒரு பதட்டமும் வேறு எதுவுமே வரவில்லை. 2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஷட்டர் என்ற படம் அற்புதமாக இருக்கும். அதில் சீட்டு முனையில் ரசிகர்களை அமர வைத்திருப்பார்கள். வெளிநாட்டில் வந்தவராக லாலை அதில் காண்பிப்பார்கள். வீட்டில் யாருக்கும் மதிப்பு கொடுக்க மாட்டார்.
அவர் ஒருநாள் இரவு பெண்ணோடு தங்கி விடுவார். வெளியே பூட்டு போட்டு விடுவார்கள். வெளியே தெரிந்தால் மானம் போய்விடும் என்ற பதட்டம் நமக்குள் இருக்கும். அந்த ஐடியாவை வைத்துக்கொண்டு இந்த படத்தை செய்தார்களா எனத் தெரியவில்லை. ஆனால் ஒரு பதட்டமும் தோன்றவில்லை. அது ஒரு குறையாக இருந்தது. அதே சமயம் போர் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியும் மெதுவாக இருந்தாலும் சின்ன காமெடி எமோஷன்களை வைத்து நகர்த்தி விட்டார்கள். கடைசி கொஞ்ச நேரம் ரொம்பவே நன்றாக அமைந்துவிட்டது.
படம் பார்த்துவிட்டு வரும்போது நல்ல படம் பார்த்திருக்கிறோம் என்று நிறைவு வருகிறது. படம் கொஞ்சம் போர் அடிக்காமல் இருக்க காரணம் அவர்கள் எடுத்துக்கொண்ட பீரியட். அதற்கு பிறகு ஸ்கிரிப்ட் ஒர்க் சூப்பராக செய்திருந்தார்கள். தேவையில்லாத கேரக்டர் எல்லாம் படத்துக்குள் வரவில்லை. ஒவ்வொரு கேரக்டரையும் சூப்பராக வடிவமைத்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். ஆர்ட்டிஸ்ட் செலக்சனும் நன்றாக இருந்தது. அந்த குட்டி பையனை படத்தில் 2வது ஹீரோ என்றே சொல்லலாம்.
அவ்வளவு யதார்த்தமாக நடித்திருந்தான். உண்மையை சொல்லும் சீனில் எல்லாம் அவனது நடிப்பு அபாரம். அதிக பிரசங்கித்தனம் எதுவும் செய்யவில்லை. ஒரு ரவுடி மனமாற்றம் அடைகிறான் என்பதை எமோஷனலாகவும் காமெடியாகவும் சொல்லியிருக்கிறார்கள். இந்த படத்துக்கு தாராளமாக குடும்பத்தோடு போகலாம். வித்தியாசமான ஃபீல் குட் படம் பார்த்த திருப்தி கிடைக்கும் என்று ப்ளு சட்டை மாறன் கூறியிருக்கிறார்.





