நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பதான். தீபிகா படுகோனே, சல்மான் கான் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் பாலிவுட்டில் மிகப்பெரிய வசூலை பெற்றது. 225 கோடி ரூபாயில் உருவான இந்த திரைப்படம், 650 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது. மேலும் பல மாதங்களாக ஒரு வெற்றி படத்தை கூட கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த பாலிவுட்டிற்கு, இந்த திரைப்படம் நல்ல ஒரு நம்பிக்கையை கொடுத்தது.
பதான் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது ஷாருக்கான் நடித்திருக்கும் திரைப்படம் ஜவான். அட்லீ இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை ஷாருக்கான் தயாரித்து உள்ளார். இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படம் வரும் ஏழாம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் ஜவான் திரைப்படத்தின் பிரீ ஈவென்ட் நிகழ்ச்சி, சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஷாருக்கான், தமிழ்நாட்டில் உணவு மிகவும் ருசியாகவும் காரமாகவும் இருக்கும். இதனால் எனது சிக்ஸ் பேக்கையை இழந்து விட்டேன். இப்போது தொப்பையுடன் காட்சி அளிக்கிறேன். அனிருத் சாதாரண அனிருத் அல்ல, வித்தைக்காரன் அனிருத். விஜய் சேதுபதி, அட்டகாசமான விஜய் சேதுபதி. நயன்தாரா, வசீகரமான நயன்தாரா. அட்லி, மரண மாஸ் அட்லி. இதில், அனிருத் என் மகனைப் போன்றவன். அவனின் ஒய் திஸ் கொலவெறி டி பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அனிருத், ஜவான் திரைப்படத்தில் ஒரு பாடலை மட்டும் இசையமைப்பதாக இருந்தது. நான்தான், அவன் முழு படத்திற்கும் இசையமைக்க விரும்பினேன். அனிருத் எனக்கு குழந்தை. விஜய் சேதுபதியிடம் இருக்கும் சிறந்த திறமைகளை நான் கற்றுக் கொண்டேன். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ளதான் நான் இங்கு வந்துள்ளேன். எனக்கு கற்றுக் கொள்வதற்கும், வளர்வதற்கும் வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி.
கோபுரம் ஃபிலிம்சை சேர்ந்த கோபாலனுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அட்லி என்னை இங்கே இருக்கச் சொன்னார். என் வாழ்நாளில் இது போன்ற ஒரு நிகழ்வில் நான் கலந்துகொண்டதே இல்லை. நான் தாழ்மையுடன் இருக்கிறேன். என்னை இங்கு வைத்திருந்ததற்கு மிக்க நன்றி. எனக்கு தமிழ் படங்கள் பிடிக்கும். தமிழ் சினிமாவில் இருந்துதான் சிறந்த படங்கள் வருகின்றன என்பதை நான் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே உணர்ந்தேன்.
சந்தோஷ்சிவன், மணிரத்னம் அவர்களுக்கு நான் மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதன்பிறகு, நான் கமல் சாரின் ஹேராம் படத்திலும், ரஜினி சார் ராஒன் படத்திலும் நடித்தேன். எனக்கு இங்கு பல நல்ல நண்பர்கள் உள்ளனர். நான் என் வாழ்நாளில் தமிழ்நாட்டில் ஒரு படத்துக்கான நிகழ்ச்சியை நடத்தியதில்லை. நான் ஷோபி மாஸ்டரிடம், எனக்கு கடினமான நடன அசைவுகளை கொடுக்காதீர்கள் என்று கூறுவேன். என்னால் தளபதி விஜய் மாதிரி நடனமாட முடியாது என்று பேசினார். ஷாருக்கானின் இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





