சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்ஆர் நாதன் இசையமைப்பாளர் தேவாவின் தீவிர ரசிகராக இருந்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழர் செல்லப்பன் ராமநாதன், சுருக்கமாக எஸ்ஆர் நாதன். சிங்கப்பூரின் 6வது அதிபராக சிங்கப்பூர் வரலாற்றில் மிக நீண்ட காலம் அதிபராக இருந்தவர். தேவா இசை மீது தீராத பற்று கொண்ட எஸ்ஆர் நாதன் அவர் மறைந்த பிறகு தேவா இசையமைத்த தஞ்சாவூரு மண்ணெடுத்து பாடலை ஒலிக்க செய்ய வேண்டும் என்று தனது விருப்பத்தை முன்பே தெரிவித்து இருந்தார். சேரன் இயக்கிய பொற்காலம் படத்தில் இடம்பெற்ற பாடல் அது. கடந்த 2016ம் ஆண்டு தனது 92வது வயதில் எஸ்ஆர் நாதன் காலமானார். அவரது விருப்பப்படியே உலகத் தலைவர்கள் பங்கேற்ற சிங்கப்பூர் அரசின் அதிகாரப்பூர்வ இறுதி நிகழ்வில் தேவா இசையமைத்த தஞ்சாவூரு மண்ணெடுத்து என்ற பாடல் ஒலிக்கப்பட்டது. ஒரு நாட்டின் அதிபருக்காக அரசு இறுதி நிகழ்வில் தமிழ் இசையமைப்பாளர் தேவாவின் பாடல் ஒலித்தது திரை இசை வரலாற்றில் அரிதான ஒரு பெருமையாகும்.





