நடிகர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்டவர் மாரிமுத்து. இரண்டு படங்களை இயக்கியவர் வெற்றி பெற முடியாததால் மிஷ்கின் மூலம் யுத்தம் செய் படத்தில் நடிகராக அறிமுகமானார்.அந்தப் படத்தில் மாரிமுத்துவின் எதார்த்தமான நடிப்பு பலரையும் கவர்ந்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தன. அந்தவகையில் தொடர்ந்து நடித்து வந்த அவர் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்தார்.
பெரிய திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் கலக்கினார் அவர். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் மூலம் பட்டித்தொட்டியெங்கும் ஃபேமஸ் ஆனார். கரியரின் உச்சத்தில் இருந்த அவர் சென்னையில் சொகுசு வீடு ஒன்றையும் கட்டிவந்தார். ஆனால் கடந்த வாரம் சீரியலுக்கு டப்பிங் கொடுக்கும்போது உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஆனால் ஒரு சிலரோ மாரிமுத்து கடந்த மாதம் ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜோசியர்களுக்கு எதிராக பேசியதால்தான் அவர் இறந்துவிட்டார் என கிளப்பிவிட்டார்கள். இதற்கு பலரும் தங்களது ஆதங்கத்தையும், கண்டனத்தையும் கொட்டிவருகின்றனர். அந்தவகையில் நடிகரும் மாரிமுத்துவின் நண்பருமான ஜீவா ரவி ஒரு பேட்டியில் கொந்தளித்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில் பேசிய அவர், “மாரிமுத்து வறுமையிலும் வாழ்ந்திருக்கிறார், புகழின் உச்சியிலும் வாழ்ந்திருக்கிறார். அவருடைய கனவே வீடு கட்ட வேண்டும் என்றும் அதில் மனைவிக்கு ஒரு ஏசி அறை அமைக்க வேண்டும் என்பதுதான். அதைத்தான் அடிக்கடி அவர் சொல்வார். அதுமட்டுமில்லாமல் அந்த வீட்டில் புத்தகங்கள், பழங்கால பொருட்கள் எல்லாம் வைத்திருக்கிறேன். வீட்டுக்கு வாருங்கள் என கூறி கட்டிவந்தார்.
ஜோசியத்தைல் பழித்ததால்தான் மாரிமுத்து இறந்தார் என்பதை கேட்கும்போது வருத்தமாகவும் கோபமாகவும் இருக்கிறது. கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் இறந்தா போகிறார்கள். தயவு செய்து இதுபோன்ற தவறான செய்தியை பரப்பாதீர்கள். அவருக்கான நேரம் முடிந்துவிட்டது இறந்துவிட்டார் அவ்வளவுதான். அவர் இறந்த இரண்டாவது நாளே ஜோசியத்தை பழித்ததால் இறந்தார் என கூறுவதற்கு எப்படி மனது வருகிறது. உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கிறதா இல்லையா. குடும்பம் முக்கியம் என்று மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தவர் அவர். அவர் இல்லையென்றாலும் அவரது மகன் குடும்பத்தை காப்பாற்றுவார்” என்றார்.





