நடிகர் கமல்ஹாசன், 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவின் அடையாளமாக விளங்கி வருகிறார். 5வயது சிறுவனாக இருக்கும்போதே எம்ஜிஆரும், சிவாஜிகணேசனும் தோளில் தூக்கி வைத்து கமலை கொண்டாடி இருக்கின்றனர்.
நடிகர் கமல் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களிலும் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர். அவர் நடிக்க வந்த ஆரம்ப கட்டத்தில் மலையாளத்தில் அதிக படங்களில் அவர் நடித்ததால், கமலை மலையாளி என நினைத்த ரசிகர்கள் ஏராளமானோர் உண்டு. அந்த அளவுக்கு மொழி பாகுபாடின்றி தன் நடிப்பு கலையை வெளிப்படுத்தும் கலைஞன் அவர்.
இப்போதும் கமல்ஹாசன் படங்கள் என்றாலே, பிறமொழிகளில் தனிவரவேற்பு உண்டு. உண்மையில் பான் இந்தியா நடிகர் என்றால் அது கமல்ஹாசனுக்கு மிக சரியாக பொருந்தும். ஏனெனில் பிற மொழிகளிலும் மிகவும் கவனிக்கத்தக்க, வரவேற்க தக்க ஒரு நடிகராக இன்றும் இருந்து வருகிறார் நடிகர் கமல்ஹாசன்.
பல ஆண்டுகளுக்கு முன், கலைப்புலி எஸ் தாணு தயாரித்த ஆளவந்தான் படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்தார். இந்த படத்தை டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். மனநலம் பாதித்தவராக நந்து கேரக்டரிலும், ராணுவ அதிகாரியாக விஜய் என்றும் 2 கேரக்டர்களில் கமல் நடித்திருந்தார். கடவுள் பாதி, மிருகம் பாதி என்ற டிரண்டிங் பாடல் இந்த படத்தில்தான் இடம்பெற்றது.
இந்த படத்தில் நடிப்பதற்காக கமல்ஹாசன் டெல்லி சென்றிருந்தார். அப்போது அவரது புல்லட்டுகள் நிரப்பிய சொந்த துப்பாக்கியை, அவரது பாதுகாப்புக்காக படப்பிடிப்பு தளத்துக்கு எடுத்துச் சென்றார். லைசென்ஸ் பெற்ற துப்பாக்கி என்றாலும், படப்பிடிப்பு குழுவினர் ஆச்சரியப்பட்டனர். ஆனால், அந்த சமயத்தில் கமலுக்கு கொலை மிரட்டல் இருந்ததால், ஆளவந்தான் ஷூட்டிங்கை காஷ்மீரில் நடத்தவும் அனுமதிக்கவில்லை.
இதற்கு காரணம், ஏக் தூஜே கேலியே படம் மூலம் இந்தியில் பெரிய வரவேற்பு, புகழை கமல் பெற்றிருந்தார். அப்போது பாலிவுட் ஸ்டார் ராஜ்கபூர் மகன் ரிஷி கபூர் இந்தி சினிமாவில் அறிமுகமானார். இந்தி சினி பீல்டில் அவருக்கு கமல் போட்டியாக இருக்கிறார் என பாலிவுட் தரப்பில் கருதியதால் இப்படி ஒரு பிரச்னை ஏற்பட்டு கமலுக்கு மிரட்டல் இருந்துள்ளது. அதனால்தான், தனது பாதுகாப்புக்காக கமல், அப்போது கமல் சொந்த துப்பாக்கி வைத்திருப்பது படக்குழுவினருக்கு தெரிய வந்தது.





