தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. அவரை இந்திய சினிமாவில் மெகா ஸ்டார் என்று ரசிகர்கள் அன்பாக அழைக்கின்றனர். தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி நடிகைகள் விஜயசாந்தி ராதா ஆகியோர் இணைந்து நடித்த படம் எமுடுக்கி மொகுடு. கடந்த 1988ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை ரவி ராஜா பினிசெட்டி இயக்கியிருந்தார்.
தெலுங்கில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. ஆக்சன் மற்றும் காமெடி காட்சிகள் நிறைந்த இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து நடிக்க நடிகர் ரஜினிகாந்த் விரும்பினார். மற்ற மொழிகளில் சூப்பர் ஹிட் ஆன படங்களை தமிழில் ரீமேக் செய்து நடிக்க பல ஹீரோக்கள் இப்படி விரும்புவது வழககமான ஒன்றுதான்.
இந்த விஷயத்தை தனது ஆஸ்தான இயக்குனர் எஸ் பி முத்துராமனிடம் ரஜினிகாந்த் சொல்லி இருக்கிறார். அதன்பிறகு இயக்குனர் எஸ்பி முத்துராமன் தயாரிப்பாளர் பூர்ண சந்திர ராவிடம் இதுபற்றி பேசி இந்த படத்தை தயாரிக்க வைத்தார். ரஜினிகாந்த் ஸ்கிரீனில் வந்தாலே படம் ஹிட்டு தான் என்று இருந்த காலகட்டம் அது.
தமிழில் அதிசய பிறவி என்ற பெயரில் உடனடியாக எமுடுக்கி மொகுடு தெலுங்கு படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் உடன் நடிகைகள் கனகா மற்றும் ஷீபா ஆகாஷ்தீப் நாகேஷ் ஜெய்கணேஷ் சோ விஜயலலிதா செந்தாமரை சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகின.
ஏழையான ரஜினிகாந்த் பணக்கார வீட்டு பெண் ஷீபாவை காதலிப்பார். இது பிடிக்காத பணக்காரர் ரஜினியை விபத்து போல செட்டப் செய்து கொன்று விடுகிறார். இறந்த ரஜினி எமனிடம் சென்று நியாயம் கேட்க அவரோ ரஜினிக்கு மறுவாழ்வு கொடுத்து மீண்டும் பூமிக்கு அனுப்புகிறார் அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை. சிறிதும் லாஜிக் இல்லாத இந்த புனைவு கதையை தெலுங்கு ரசிகர்கள் வெகுவாக ரசித்து வெற்றி பெறச் செய்தார்கள்.
ஆனால் தமிழ் ரசிகர்கள் லாஜிக் மிஸ்டேக் பற்றி கேள்வி கேட்டு படத்தை தோல்வியடைய செய்து விட்டார்கள். ரஜினியை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கிய தோல்வி படங்களில் அதிசயப் பிறவி படமும் ஒன்று. சினிமா ரசிப்புத்தன்மை மாநிலத்துக்கு மாநிலம் மொழிக்கு மொழி வேறுபடும் என்பதை இந்த படம் உணர்த்திவிட்டதாக பின்னாளில் ஒரு முறை பேசிய நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக கூறியிருந்தார்.





