நடிகர் ஜீவா நடிப்பில் வருகிற 11ம் தேதி பிளாக் படம் ரிலீஸ் ஆகிறது. ஆசை ஆசையாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. தொடர்ந்து சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கொரில்லா, கலகலப்பு 2, ரௌத்திரம், நண்பன், சிங்கம்புலி, கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஜீவா. இவரது ஜாலியான நடிப்புக்கு என தனியாக ரசிகர் கூட்டம் உண்டு.
பொட்டன்ஷியல் ஸ்டுடியோ தயாரித்துள்ள பிளாக் என்ற புதிய படத்தில் ஜீவா நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் கே ஜி பாலசுப்ரமணி இயக்கிய இந்த படத்தில் ஜீவா ஹீரோவாகவும், நடிகை பிரியா பவானி சங்கர் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விவேக் பிரசன்னா, யோக் ஜெபி, சாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிளாக் படத்தில் இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே பிரதானமாக கொண்டு ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவங்களை வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக ஒரு குடியிருப்பில் வசிக்க வரும் கணவன், மனைவி சில அமானுஷ்யங்களை சந்திப்பதும், அந்த திகில், திரில் காட்சிகள இந்த படத்தின் கதைக்கருவாக இருக்கிறது. டிமாண்டி காலனி 2 போலவே, பிளாக் படமும் பிரியா பவானி ஷங்கரின் நடிப்புக்கு நல்ல தீனியாக இருக்கும்.
பிளாக் படத்தின் பிரமோ நிகழ்ச்சிக்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில், நடிகர் ஜீவா இயக்குனர் கேஜி பாலசுப்ரமணி உள்ளிட்ட படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது நடிகர் ஜீவா கூறியதாவது, இந்த படத்தின் கதையை கேட்டவுடனே எனக்கு பிடித்து விட்டது. பல நடிகர்களிடம் இந்த கதை சொல்லப்பட்டு திருத்தப்பட்ட கதையாக என்னிடம் வந்ததுதான் அதற்கு காரணம். அதனாலயே எனக்கு இந்த படம் பிடித்தது.
இது ஆங்கில படத்தின் ரீமேக்தான். ஆனால் நான் அந்த ஆங்கில படத்தை பார்க்கவில்லை. இயக்குனர் என்ன கதை சொன்னாரோ, அதை அப்படியே நடித்துள்ளேன். என்னுடைய 21 ஆண்டுகால திரைப்பயணத்தில் முக்கியமான படமாக பிளாக் இருக்கும் . நான் சினிமாவுக்கு நடிக்க வந்த முதல் 10 ஆண்டுகளில் பல புதிய முயற்சிகளை எடுத்தேன். அதன்பிறகு இப்போது இந்த படத்தில் அப்படி ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளேன்.
நிச்சயம் இந்த படம் வித்யாசமான, சுவாரஸ்யமான படமாக இருக்கும். இந்த படம் புரியவே, மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் எனத் தோன்றும். இந்த படத்தில் நான் மட்டுமே உங்களுக்கு முக்கிய அம்சமாக இருப்பேன். அதற்கு காரணம் படம் முழுக்க சீரியஸாக செல்லும். நான் தனியாக இருப்பேன். என்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வருவதற்கு இந்த படம் மிகவும் உதவியாக இருந்தது. படத்தின் டப்பிங் பணியின் போது நண்பர்கள் சில காட்சிகளை பார்த்துவிட்டு படத்தில் ஏதோ உள்ளது என்றனர், என்று ஜீவா கூறியுள்ளார். அவரே பிளாக் படத்தை 2வது முறை பார்த்தால்தான் புரியும் என்று கூறியிருப்பது சர்ச்சையாகி வருகிறது.





