சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு படிப்படியாக முன்னேறியவர்களின் மிக முக்கியமானவர் நடிகர் கவின். ஆரம்பத்தில் சின்னத்திரை சீரியலில் நடித்துக் கொண்டிருந்த அவருக்கு, சரவணன் மீனாட்சி தொடர் பெயரைக் கொடுத்தது. அதில் வேட்டையன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்த கவின், பலராலும் பேசப்பட்டார். அந்த கதாபாத்திரம் ஏற்படுத்திய தாக்கத்தால் கவினை பலரும் வேட்டையன் என்றே அழைத்து வந்தனர். இதன்பிறகு தாயுமானவன் சீரியலிலும் கவின் நடித்தார்.
இப்படி தொடர்ந்து சீரியல்களிலேயே தலைகாட்டி வந்த கவினுக்கு, விக்ரம் பிரபுவின் சத்ரியன் திரைப்படம் மூலம் வெள்ளித் திரைக்குப் போகும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அந்த படத்தில் சின்ன ரோலிலேயே அவர் நடித்தார். ஒரு பெரிய திருப்புமுனைக்காக காத்திருந்த கவினுக்கு, பிக் பாஸ் நிகழ்ச்சி வர பிரசாதமாக அமைந்தது. அந்த சீசனில், கவினுக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகி அவரது அணுகுமுறையை நாள்தோறும் பலர் ரசிக்க ஆரம்பித்தனர். போட்டியின் இறுதிவரை சென்ற கவின், திடீரென அங்குள்ள பணப்பெட்டியை எடுத்துவிட்டு பிக் பாஸ் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.
இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் வீட்டில் கவினும், இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியாவும் காதலிப்பதாக அரசல் புரசலாக பேசப்பட்டது. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, இந்த தகவலை இருவரும் திட்டவட்டமாக மறுத்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த புகழின் காரணமாக வெள்ளித்திரையில் கதாநாயகனாக மாறும் அந்தஸ்தைப் பெற்றார் கவின். அவர் நடிப்பில் வெளியான லிஃப்ட் திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று, கவினுக்கு ஒரு இமேஜ்ஜை கொடுத்தது.
இதன்பிறகு கணேஷ் பாபு இயக்கத்தில் டாடா படத்தில் நடித்தார் கவின். கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இந்த திரைப்படம், நல்ல விமர்சனத்தை பெற்றதுடன் வசூலையும் வாரி குவித்தது. அது மட்டுமில்லாமல் கவின் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதாகவும் அவரை பலர் பாராட்டினர். தொடர்ந்து நடன இயக்குனர் சதீஷ் மற்றும் பியார் பிரேம காதல் இயக்குனர் எலன் ஆகியோர் இயக்கத்தில் தற்போது கவின் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி நடிகர் கவின் தனது தோழியான மோனிகாவை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். மிக எளிமையாக இவர்களின் திருமணம் நடைபெற்ற நிலையில், இதன் வரவேற்பு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் இயக்குனர் நெல்சன் தனது குடும்பத்துடன் வந்து தம்பதியை வாழ்த்தினார். இதேபோல், நடிகர் சிவகார்த்திகேயனும், கவின் மோனிகா தம்பதியை வாழ்த்தினார். டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகும் நிலையில், புதுமணத் தம்பதிக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.





