தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருப்பவர் கவின். இவர் விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் மக்களிடம் கவனம் பெற்றவர். பிறகு சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதன்பிறகு நட்புனா என்ன தெரியுமா என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
அதன் பிறகு விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துக் கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி நடிகர் கவினுக்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதன் பிறகு லிப்ட் என்ற படத்தில் நடித்தார். இதில் ஓடிடியில் நேரடியாக வெளியான லிப்ட் படம் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது.
அதன்பிறகு டாடா ஸ்டார் கிஸ் பிளடி பெக்கர் உள்ளிட்ட படங்களில் கவின் நடித்துள்ளார். இந்த படங்களும் நடிகர் கவினுக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளது. தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிகை நயன்தாராவுடன் நடிகர் கவின் ஹாய் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன.
இந்த படத்தில் நடிகர்கள் கே பாக்யராஜ் பிரபு நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து கன்னக்குழியா, ரசகுல்லா என்ற 2 பாடல்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. வருகிற 28ம் தேதி ஹாய் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
வயதில் சிறியவன் தன்னை விட மூத்த வயதுள்ள பெண்ணின் மீது காதலில் விழுகிறான் போன்ற கதைக்களத்தில் ஹாய் படம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கவின் நயன்தாரா நடித்த ஹாய் படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்த படம் குறித்து டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் கவின் பேசியதாவது, பொதுவாகவே நான் கமெண்ட்ஸ்களை படிப்பதில்லை. ஆனால் இந்த படத்தின் அறிவிப்பின் போது ஒருவர், சீரியலில் நடித்திருந்த கவின் நயன்தாராவுடன் நடிப்பான் என ஒருநாளும் நினைத்திருக்க மாட்டான் என்று கமெண்ட் செய்திருந்தார்.
சீரியல்களை விடவும் நான் திரைப்படங்களை பார்ப்பதற்கு விரும்புவேன். அதிலும் நயன்தாராவின் யாரடி நீ மோகினி படத்தை பார்த்திருக்கிறேன். திருச்சியில் கல்லூரியில் அப்போது படித்துக் கொண்டிருந்தேன். தியேட்டரில் யாரடி நீ மோகினி படத்தை நானும் என் நண்பர்கள் 23 பேரும் பார்த்தோம். நிச்சயமாக அந்த கவின் நயன்தாராவுடன் நடிப்பான் என்று நினைத்திருக்க மாட்டான். நயன்தாராவுடன் நடிப்பது என்பது எனது லிஸ்ட்டில் கூட இல்லை. அதனால் நாமும் நன்றாக உழைத்திருக்கிறோம் என்பது போல நினைத்துக் கொண்டேன் என்று அந்த நிகழ்ச்சியில் கவின் பேசியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





