இயக்குனர் பாலா இயக்கிய நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி கேரக்டரில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் கருணாஸ். காமெடி நடிப்பில் ரசிகர்களின் மனதை கவர்ந்த கருணாஸ் பிறகு திண்டுக்கல் சாரதி அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்தார். அதிலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராகவே இருந்தார்.
இப்போது நடிகர் கருணாஸ் மகனும் நடிகராகி விட்டார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடிகர் தனுஷின் மகன் கேரக்டரில் கென் கருணாஸ் நடித்திருந்தார். தொடர்ந்து சமீபத்தில் வெளியான விடுதலை 2 படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் கென் கருணாஸ் நடிப்பு பெரிய வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்த நடிகர் கென் கருணாஸ், நடிகர் தனுஷ் இயக்கிய ராயன் படத்திலும் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்திலும் உதவி இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து தற்போது நடிகர் கென் கருணாஸ் இயக்குனராக அவதாரம் எடுக்கிறார்.
நடிகர் கென் கருணாஸ் இயக்கும் ஒரு புதிய படத்தில் அவரே படத்தின் நாயகனாக நடிக்கிறார். முதலில் இந்த படத்தை கென் கருணாஸின் தந்தை நடிகர் கருணாஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது கென் கருணாஸின் நண்பர் கருப்பையா என்பவர்தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளார்.
இந்த படத்தை முதலில் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் டைரக்ட் செய்வதாக இருந்த நிலையில், அவர் தொடர்ந்து பிஸியாக இருப்பதால் இந்த படத்தை கென் கருணாஸிடம் நீயே டைரக்ட் செய்துவிடு என்று வேல்ராஜ் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நாயகியாக நடிக்க கோர்ட் என்ற தெலுங்கு படத்தில் நடித்த ஸ்ரீதேவி அபர்ணா என்பவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
மொத்தம் 8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் பள்ளி வாழ்க்கையை மையப்படுத்திய கதை பின்னணியில் உருவாகிறது. அதனால் 96 ஆட்டோகிராப் போன்ற படங்களின் சாயலில் உருவாக உள்ளது. அதே நேரத்தில் பிரதீப் ரங்கநாதன் படங்களை போல ஜாலியான ஒரு படமாகவும் இது இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.





