நடிகர் மாரிமுத்து, சமீபத்தில் தான் மாரடைப்பால் காலமானார். 57 வயதான அவரது மறைவை, அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல, திரையுலகம் சார்ந்தவர்கள், அவரது நடிப்பை பார்த்து ரசித்த ரசித்தவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,
ஏனெனில், ஒரு நடிகனுக்குரிய எந்த பந்தாவும் இல்லாமல், நெருங்கிய மனிதரை போன்ற தோற்றமும், யதார்த்தமான பேச்சும், வெளிப்படையான அவரது தன்மையும் எளிதில் ரசிகர்களை கவர்ந்தது. அதுவும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த பிறகு, குறிப்பாக, அவரது ‘ஏய் இந்தாம்மா’ என்ற வார்த்தைகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக்கியது. இன்னும் பல உயரங்களை தொடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென இந்த மண்ணுலகை விட்டு பிரிந்து விட்டார்.
நடிகர் மாரிமுத்து, சினிமாவில் இயக்குநர் வசந்த் இயக்கிய படங்களுக்கு உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். அதன்பிறகு, கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களையும் இயக்கி இருக்கிறார். அதைத் தொடர்ந்து, சினிமாவில் தலைகாட்ட ஆரம்பித்து, குணச்சித்திர நடிகராக வலம் வந்தார். கொம்பன், விக்ரம், பரியேறும் பெருமாள், மருது, ஜெயிலர், கடைக்குட்டி சிங்கம், கார்பன் உள்ளிட்ட பல படங்களில் சிறந்த நடிகராக தன்னை வெளிப்படுத்தி இருந்தார்.
வில்லன், குணச்சித்திர நடிப்பு என, கேரக்டருக்கு ஏற்றபடி, இவரது மெருகேறிய நடிப்பு, ரசிகர்களுக்கு மட்டுமின்றி, இயக்குநர்களுக்கும் வெகுவாக பிடித்துப் போனது. அதனால், நிறைய பட வாய்ப்புகள் வந்தன.தேனி மாவட்டத்தில் உள்ள பசுமலை என்ற கிராமத்தில், வறுமை நிறைந்த குடும்பத்தில் இருந்து, சென்னைக்கு வந்து, நடிகராக வெற்றி பெற்றவர் மாரிமுத்து. அவர் சொந்த வீடு கட்டி வந்த நிலையில், புது வீட்டை காணும் வாய்ப்பும் அவருக்கு இல்லாமல் போய்விட்டது.
இந்நிலையில், மாரிமுத்துவின் நண்பர், நடிகர் ஜீவா ரவி நேர்காணல் ஒன்றில் பேசும் போது, மாரிமுத்துவுக்கு நிறைய படங்களில் நடிக்க ஆசை இருந்தது. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் படங்களில் நடிக்க வேண்டும்.
குறிப்பாக, பாலிவுட் படங்களுக்கு செல்வது அவரது பெரிய ஆசையாக இருந்தது, என கூறியிருக்கிறார். நிச்சயம் பாலிவுட் படங்களில் நடிக்கும் அளவுக்கு திறமையான நடிகர்தான். மாரிமுத்து உயிருடன் இருந்திருந்தால், அந்த உயரங்களை நிச்சயம் தொட்டிருப்பார் என கவலையுடன் தெரிவிக்கின்றனர் அவரது ரசிகர்கள்.





