இயக்குனர் சரண் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடித்த அமர்க்களம் படத்தில், காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா என்ற பாடல் காட்சியில் தோன்றி நடனமாடியவர் ராகவா லாரன்ஸ். நடன இயக்குனராக தமிழ் தெலுங்கு படங்களில் பணிபுரிந்த அவர் பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். பார்த்தேன் ரசித்தேன் அற்புதம் ஸ்டைல் முனி போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
ராஜ்கிரணுடன் ராகவா லாரன்ஸ் இணைந்து நடித்த முனி படம் ராகவா லாரன்ஸ்க்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அடையாளத்தை வரவேற்பை பெற்றுத் தந்தது. அந்த படத்தின் தொடர்ச்சியாக தான் காஞ்சனா காஞ்சனா 2 காஞ்சனா 3 வரை திகில் படங்களாக லாரன்ஸ் நடித்து வெற்றி பெற்றார். இப்போது காஞ்சனா 4 படம் ஷூட்டிங் நடந்து வருகிறது. இதில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருக்கிறார்.
சிவலிங்கா மொட்ட சிவா கெட்ட சிவா ருத்ரா இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம் பாண்டி ராஜாதி ராஜா ஜிகர்தண்டா டபுள்எக்ஸ் சந்திரமுகி 2 உள்ளிட்ட படங்களில் நடித்த ராகவா லாரன்ஸ் நடிப்பது மட்டுமின்றி, மக்களுக்கு பலவித நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். பல ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு கல்வி உதவி செய்து வருகிறார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் நடன இயக்குனராக, நடிகராக மக்கள் மத்தியில் எந்தளவுக்கு பெயர் புகழ் பெற்றாரோ அதை விட பலமடங்கு அவர் செய்து வரும் தர்ம காரியங்கள் நலத்திட்ட உதவிகளால் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கிறார். கடந்த ஆண்டு மே மாதம் 1ம் தேதி மாற்றம் என்ற சேவை அமைப்பை துவங்கி, முதல் கட்டமாக விவசாயம் பயன்பாட்டுக்காக 11 டிராக்டர்களை இலவசமாக அவரே விவசாயிகளுக்கு வழங்கினார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ராகவா லாரன்ஸிடம் நீங்கள் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நான் ஏன் அரசியலுக்கு வர வேண்டும். இப்போதே மக்களுக்கு நல்லதுதான் செய்துக்கொண்டு இருக்கிறேன்.
அரசியலுக்கு வந்து மக்கள் பணத்தை வாங்கி அவர்கள் பணத்தில் அவர்களுக்கு உதவி செய்து அதை போஸ்டர் அடித்து ஒட்டுவதை விட எனது சொந்த உழைப்பில் கிடைத்த வருமானத்தில், அந்த பணத்தில் மக்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வதே பெரிய விஷயமாக நினைக்கிறேன் என்று ராகவா லாரன்ஸ் கூறியிருக்கிறார். இதை கேள்விப்படும் தளபதி ரசிகர்கள், ராகவா லாரன்ஸ் போன்ற நல்ல மனிதர்கள், டிவிகே கட்சியில் இணைந்தால் நன்றாக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.





