தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து பிறகு கதாநாயகனாக மாறியவர் புரட்சித் தமிழன் சத்யராஜ். கடந்த 1980 90களில் ஏராளமான வெற்றிப் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்த சத்யராஜ், சமீப காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். பாகுபலி கட்டப்பா கேரக்டர் அவருக்கு ஒரு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ், ஸ்டூடண்ட் நம்பர் 1 என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் ஒரு சில படங்கள் தவிர மற்ற படங்கள் எதுவும் பெரிய அளவில் சிபிராஜூக்கு வெற்றியை தரவில்லை. வாரிசு நடிகர்களில் வரவேற்பை பெறாத நடிகர்கள் லிஸ்ட்டில் சிபிராஜூம் இருந்து வருகிறார்.
இதற்கிடையே நடிகர் சத்யராஜ் அவரது மகள் திவ்யா சத்யராஜ் இருவருமே திமுக ஆதரவாளர்களாக இருந்து வருகின்றனர். இதில் திவ்யா சத்யராஜ், திமுகவில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். அப்பா அக்கா இருவருமே திமுகவில் உள்ள நிலையில் சிபிராஜ் மட்டும் தவெக ஆதரவாளராக இருந்து வருகிறார். அவ்வப்போது விஜய் குறித்த பதிவுகளை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் சிபிராஜ், இன்று அக்டோபர் 6ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினர். தனது பிறந்த நாளில் அவர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அண்டர்டாக் பிலிம்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை அவர் துவங்கியிருக்கிறார். இந்த நிறுவனம் மூலம் முதல் தயாரிப்பாக புரடக்சன்ஸ் நெம்பர் 1 என்ற படம் துவங்கி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த படத்தை ஜீப்ரா படத்தை இயக்கிய இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தின் கதாநாயகன் சிபிராஜ் தான். அவரே இந்த படத்தை தயாரிக்கும் நிலையில் அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார். படம் குறித்த மற்ற தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. படத்தின் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் கதையின் ஜானர் உள்ளிட்ட விஷயங்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை. விரைவில் அதுகுறித்த அப்டேட்ஸ் அதிகாரபூர்வமாக வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
ஏற்கனவே சிபிராஜின் அப்பா நடிகர் சத்யராஜ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் நாதம்பாள் ஃபிலிம் பேக்டரி என்று தன்னுடைய அம்மா நாதம்பாள் பெயரில் தயாரிப்பு நிறுவனம் நடத்தினார். அந்த நிறுவனம் மூலமாக சிபிராஜ் நாயகனாக நடித்த லீ நாய்கள் ஜாக்கிரதை சத்யா ஆகிய படங்களை அவரே சொந்தமாக தயாரித்தார். இப்போது அவரது மகன் சிபிராஜ் தயாரிப்பாளராக களத்தில் குதித்திருப்பது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.





