தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தவர் சூரி. வெண்ணிலா கபடிக்குழு படத்தில் அவரது பரோட்டா காமெடி பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதால், பரோட்டா சூரி என்றுதான் அவரது அடுத்த பல படங்களில் டைட்டில் கார்டில் போடப்பட்டது. அந்த அளவுக்கு அந்த காமெடி அவருக்கு கை கொடுத்திருந்தது.
நடிகர் சிவகார்த்திகேயனுடன் சூரி காமெடி ரோலில் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மனம் கொத்திப் பறவை ரஜினி முருகன் சீமராஜா நம்ம வீட்டுப்பிள்ளை போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றது. சிவகார்த்திகேயன் சூரி காமெடி காம்போ ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுத் தந்தது.
அதே போல் ரஜினி விஜய் அஜீத்குமார் சூர்யா ஜெயம் ரவி விஷ்ணு விஷால் தனுஷ் என பல முன்னணி ஹீரோக்களுடன் சூரி காமெடி நடிப்பு பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. சந்தானம் ஹீரோ ஆன நேரத்தில் காமெடி ரோலுக்கு ஆளில்லாத சூழலில் சூரிக்கு அது பெரிய வாய்ப்பாக அமைந்தது.
ஆனால் ஒரு கட்டத்தில் அவரும் ஹீரோவாகி விட்டார். விடுதலை விடுதலை 2 கருடன் கொட்டுக்காளி ஆகிய படங்களை தொடர்ந்து வரும் 16ம் தேதி சூரி நடிப்பில் மாமன் படம் வெளியாக உள்ளது. இதில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். இப்போது அடுத்ததாக மண்டாடி என்ற படத்திலும் சூரி நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சூரியிடம் மீண்டும் காமெடி ரோலில் நடிப்பீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அப்போது சூரி கூறியதாவது, எனக்கு யாருடனும் போட்டி கிடையாது. ஒரு கட்டத்தை தாண்டி வந்து விட்டேன். இனி மீண்டும் அந்தப் பாதைக்கு செல்வது கடினம். அப்படி நடித்தாலும் கூட அந்த கேரக்டர் வலிமையானதாகவும் என்னை மக்கள் மத்தியில் இன்னும் ஆழமாக கொண்டு செல்லும் கேரக்டராகவும் இருக்க வேண்டும்.
இனி பத்தோடு பதினொன்றாக என்னால் இருக்க முடியாது. என்னை தேடி வந்து அழைக்கிறார்களே, கண்டிப்பாக இவர்களுக்கு ஒரு படம் நடித்து கொடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் இனி என்னால் நடிக்க முடியாது. அப்படி என்றால் என்னை கதாநாயகனாக வைத்து படம் எடுக்க வரும் இயக்குனர்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்? கதையின் நாயகனாக மட்டுமே நடிப்பதில் மட்டுமே நான் திட்டவட்டமாக இருக்கிறேன் என்று நடிகர் சூரி கூறியிருக்கிறார்.





