நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கடந்த சில வருடங்களாகவே, உடல் நலக்குறைவால் போராடிக் கொண்டிருந்த விஜயகாந்தின் உயிர் இன்று பிரிந்தது. அருப்புக்கோட்டையில் பிறந்து மதுரையில் வளர்ந்த விஜயகாந்த், சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று ஆசையுடன் சென்னைக்கு வந்தார்.
அவரை அன்று முதல் புரட்சிக் கலைஞர் ஆகும் வரை வழி நடத்திச் சென்றது அவரது நண்பர் ராவுத்தர் தான். முரட்டுத்தனமான உழைப்பாளி ஆன விஜயகாந்த், அல்லும் பகலும் உழைக்க முதலில் அவருக்கு அனைத்துமே தோல்விகளாகவே முடிந்தது. கருப்பு நிறம், கிராமத்து தோற்றம் என்றே பலரும் அவரை ஒதுக்கினர். இருப்பினும் தனது முயற்சியால், கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார் விஜயகாந்த்.
அப்படி இருந்தும் அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் முதலில் தோல்வியே அடைந்தன. இந்த சமயத்தில் தான் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர், விஜயகாந்த் வைத்து சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தை இயக்கினார். விஜயகாந்துக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்த இந்த திரைப்படம் அவரை இருட்டறையில் இருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இதன்பிறகு புரட்சிக் கலைஞர் தொட்ட அனைத்துமே, வெற்றிகளாய் அமைந்தன.
குறுகிய காலத்தில் ரஜினி கமலுக்கு இணையாக வந்தார் விஜயகாந்த். சொல்லப்போனால் அவர்களுக்கு அடுத்து மூன்றாவது ஹீரோ அவர்தான் என்ற நிலை உருவானது. இது ஒரு பக்கம் இருக்க, தேமுதிக கட்சியை தொடங்கிய விஜயகாந்த் அதை வெற்றிகரமாகவே நடத்தினார். 2006 ஆம் ஆண்டு பேராவூரணி தொகுதியில் போட்டி போட்டு வெற்றி பெற்று எம்எல்ஏவானார் விஜயகாந்த். 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்ந்த அவர், 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை பெற்றார்.
பிறகு 2016 ஆம் தேர்தலில், மக்கள் நல கூட்டணி அமைத்த விஜயகாந்த் அதில் படுதோல்வியை சந்தித்தார். அதுவே தேமுதிகவை சரிவு பாதைக்கு கொண்டு சென்றது. அங்கிருந்த தேமுதிக உறுப்பினர்கள் அதிமுகவுடன் திமுக உடனும் தங்களை இணைத்துக் கொண்டனர். பின்னர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், தொடர் சிகிச்சையில் இருந்தார். சமீபத்தில் மியாட் மருத்துவமனையில் 15 நாட்களாக சிகிச்சையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்.
இந்த நிலையில் மீண்டும் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட, நேற்று அவர் மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று இருந்ததாகவும், நுரையீரல் அலர்ஜி காரணமாக மருத்துவர்கள் எவ்வளவு முயற்சி செய்ததோ அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மறைந்த விஜயகாந்திற்கு திரையுலகம் மற்றும் அரசியலைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வெளிநாட்டில் இருக்கும் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டு விஜயகாந்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விஜயகாந்த் உடன் இணைந்து பெரியண்ணா திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
அவருடன் பணியாற்றிய, பேசிப்பழகிய, சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை…
யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதே இல்லை..
கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்து புரட்சிக் கலைஞனாக உயர்ந்த அண்ணன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!! pic.twitter.com/PHeqHNG3uk
— Suriya Sivakumar (@Suriya_offl) December 28, 2023





