தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்தவர் வைகைப்புயல் வடிவேலு. குறிப்பாக 1990 முதல் 2010ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் அவர் நடித்த காமெடி காட்சிகள் இன்னும் பல ஆண்டுகள் காலம் கடந்தாலும் ரசிகர்களின் மனதில் எப்போதுமே நிலைத்திருக்கும். அந்தளவுக்கு காமெடியில் ஒரு புலிகேசி மன்னன்தான் அவர் என்றால் அது மிகையல்ல.
ஆனால் ஒரு கட்டத்தில் கடும் சர்ச்சைகளிலும் பிரச்னைகளிலும் சிக்கி 10 ஆண்டு காலம் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார் நடிகர் வடிவேலு. குறிப்பாக தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த், இயக்குனர் ஷங்கர் போன்றவர்களிடம் அவர் பிரச்னை செய்தது பெரிய பாதிப்பை அவருக்கு ஏற்படுத்தியது. எனினும் இப்போது வடிவேலு ரீ என்ட்ரி தந்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.
நடிகர் வடிவேலு குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியதாவது, சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு ஒரு சாதாரண போட்டோ கடையில் வேலை பார்த்தவர் வடிவேலு. சினிமாவில் நடிகராகி ஒரு கட்டத்தில் புகழ் பெற்று ரசிகர்கள் வடிவேலு வடிவேலு என கொண்டாட தொடங்கிய போது அவர் நிதானத்தை இழந்து விட்டார்.
இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க 5 கோடி ரூபாய் அவரிடம் அட்வான்ஸ் வாங்கியிருந்தாா் வடிவேலு. ஆனால் அந்த படம் எடுக்க முடியாமல் டிராப் ஆகி விட்டது. ஆனால் அந்த பணத்தை பல ஆண்டுகளாக வடிவேலு திருப்பி தராமல் இழுத்தடித்து விட்டார். இதுகுறித்து சங்கத்தில் முறையிட்டும் ஷங்கருக்கு அந்த பணம் திரும்ப கிடைக்கவில்லை.
ஏற்கனவே அந்த படத்தை தயாரிக்க 15 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்திருந்தார் ஷங்கர். அந்த சூழலில் வடிவேலுவும் 5 கோடி ரூபாய் தராமல் இருந்தது அவருக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. இப்போது மாமன்னன் படம் உருவான போதுதான் அந்த பணம் ஷங்கருக்கு கிடைத்தது.
பல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் இதுகுறித்து வடிவேலுவிடம் பேசி வற்புறுத்திய பிறகுதான் அந்த 5 கோடி ரூபாய் பணத்தை இயக்குனர் ஷங்கருக்கு வடிவேலு திருப்பித் தந்தார் என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். காதலன் முதல்வன் போன்ற ஷங்கர் இயக்கிய படங்கள்தான் நடிகர் வடிவேலுவுக்கு ஆரம்ப காலத்தில் பெரிய அடையாளத்தை கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.





