விஜய் டிவியில் தமிழ் பிக்பாஸ் சீசன் 10 கடந்த 6ம் தேதி துவங்கி 3 வாரங்களை தொட்டிருக்கிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை சனி ஞாயிறு தினங்களில் தொகுத்து வழங்கி வருகிறார். அவர் சமீபத்தில் பேசிய லீடர்ன்னா என்ன என்ற ஒரு கருத்து இணையத்தில் சர்ச்சையாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
எனினும் அது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மட்டுமே சொந்தமான கருத்து. யாரையும் குறிப்பிடுவன அல்ல என்று விஜய் டிவி நிர்வாகம் விளக்கம் தந்தது. நடிகர் விஜய் சேதுபதியும் நான் பேசுகிற கருத்துகள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கானது மட்டுமே, வேறு யாருடனும் எந்த அமைப்பும் சார்ந்தது அல்ல என்று தெளிவுப்படுத்தி இருந்தார்.
எனினும் அவர் பேசுகிற சில விஷயங்கள், இன்றைய நாட்டு நடப்பை ஒட்டியே இருப்பதால் பிக்பாஸ் வீட்டுக்குள் நடப்பதும் வெளியில் நடப்பதும் ஒன்றுபோலவே இருப்பதால் அவரது கருத்துகள் சில நேரங்களில் அப்பட்டமாக அப்படியே வெளியுலகுடன் பொருந்தி போகிறது.
உதாரணமாக நேற்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, நம்ம போட்டியாளர்கள் இந்த மேடையில் வந்து நிற்கும் போது நான் யாருன்னு இந்த உலகத்துக்கு காட்டறேன் அப்படீன்னு சபதம் எடுத்துக்கிட்டு முயல் மாதிரி துள்ளிக் குதிச்சிக்கிட்டு வீட்டுக்கு போவாங்க.
வீட்டுக்குள்ள ஒரு சண்டை சச்சரவு பிரச்னைன்னா அப்படியே ஆமை மாதிரி பதுங்கறது. பிரச்னைகளை தீர்க்க எந்த முயற்சியும் பண்ணாத இந்த முயலாமைகளை இன்னிக்கு புகை போட்டு புடிக்கிறோம். புடிச்சு உங்க கையில் கொடுக்கிறோம். அப்புறம் என்ன பண்ணலான்னு நீங்க பார்த்து செய்ங்க என்று பேசியிருந்தார்.
இப்போது தாராபுரம் மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் தவெக சார்பில் அதே தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 2 பெண்கள், தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக பக்கம் பதுங்கி விட்டனர். இப்போது அதே தொகுதிகளில் தவெக வேட்பாளர்களாக அவர் நிற்பதை தான் விஜய் சேதுபதி மறைமுகமாக சுட்டிக்காட்டி பேசியதாக இணையத்தில் ஒரு விமர்சனம் எழுந்து வைரலாகி வருகிறது.





