இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிகை லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் பத்தா. இயக்குனர் அட்லீ தயாரிப்பில் உருவான இந்த படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது. விமர்சன ரீதியாகவும் இந்த படம் அதிக கவனம் பெற்றுள்ளது.
ரவுடியாக உள்ள ஹீரோ ஒரு கட்டத்தில் இக்கட்டான ஒரு சூழலில் மாட்டிக் கொள்கிறான். ஒரு சிறுவன் காட்டுகிற பயத்தால் அவன் 8 நாட்கள் உணவு தண்ணீர் இல்லாமல் தவிக்க நேரிடுகிறது. குடும்பத்தை பிரிந்து வாடுகிறான். அதன்பிறகு அந்த சூழலில் இருந்து வெளிவந்தானா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
பத்தா படத்துக்கு பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இதையடுத்து பக்தா படத்தின் வெற்றியை படக்குழுவினர் நேற்று சென்னையில் கொண்டாடினர். இந்த விழாவில் படத்தின் நாயகன் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, என் ரசிகர்களுக்கு என்றுமே நன்றி கடன் பட்டுள்ளேன்.
என் படத்தை கொண்டாடுவது மட்டுமின்றி என்னைப் பற்றி பேசுபவர்களுக்கு விளக்கம் கொடுப்பது சண்டை போடுவது என உங்கள் வீட்டுப் பிள்ளையாக என்னை நினைத்து எனக்கென ஒரு கூட்டம் இருப்பதும் எனக்காக துடிப்பதும் பெருமையாக இருக்கிறது.
இப்படி என் வெற்றியை தன் வெற்றியாக மற்றவர்கள் கொண்டாடும்போது இந்த வாழ்க்கை வரம் என்று எனக்கு எண்ண தோன்றுகிறது. இதுபோன்ற தருணங்களில் என் தந்தையின் புகைப்படத்தை பார்த்து என்ன தகப்பா என்று சந்தோசப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு படத்துக்கும் மிகவும் மெனக்கெடுக்கிறேன்.
எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை என்றால் வெட்கத்தை விட்டு கேட்டு விடுவேன். தேவையில்லாமல் கெத்துக் காட்டுவது என் அறிவை மழுங்கடித்து விடும். இதுதான் சினிமாவில் நான் கற்றுக் கொண்ட பாடம். அதை என்றுமே மறக்க மாட்டேன் என்று நடிகர் விஜய் சேதுபதி அந்த விழாவில் கூறியிருக்கிறார்.





