- Advertisement -
Homeபொழுதுபோக்குவிவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்த சூழலில் கூடும் நடிகர் சங்க பொதுக்குழு; அதிகரித்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள், நாசர்,...

விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்த சூழலில் கூடும் நடிகர் சங்க பொதுக்குழு; அதிகரித்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள், நாசர், விஷால் என்ன செய்ய போகிறார்கள்?

- Advertisement -

மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் பிரச்னை பெரிய தாண்டவமாக ஆடி வருகிறது. தொடர்ந்து சில நடிகர்கள், இயக்குனர்கள் மீது நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வரும் நிலையில், நாளுக்கு நாள் இந்த பிரச்னை கொழுந்து விட்டு எரிகிறது. கேரளாவில் ஏற்பட்ட இந்த விவகாரம் இப்போது தமிழ் சினிமாவிலும் தொற்றி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ் சினிமாவில் ராதிகா, குஷ்பு, கஸ்தூரி, ஊர்வசி போன்ற சீனியர் நடிகைகள், இந்த பாலியல் விவகாரம் குறித்து பேசி வருகின்றனர். 1980களில் இருந்து இதுபோன்ற பிரச்னைகள் தமிழ் சினிமாவில் இருந்து வருவதாகவும், பல நேரங்களில் பாலியல் சீண்டல்களை நேரடியாக, மறைமுகமாக சந்தித்து வருவதாக கூறியிருக்கின்றனர்.

அதிலும் தமிழ் சினிமா துறையிலும் ஹேமா கமிட்டி போன்ற ஒரு பாலியல் துன்புறுத்தல் சார்ந்த விசாரணை கமிட்டியை ஆரம்பிக்க வேண்டும். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி, நீதிபதி, அரசு அதிகாரி, சமூக ஆர்வலர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவை ஏற்படுத்தி, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க வேண்டும்.

மேலும் இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்கள், பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு பாதுகாப்பும், அச்சமில்லாத உணர்வும், எந்த பிரச்னையையும் உடனடியாக சொல்லும் தைரியமும் வரும் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் வருகிற 8ம் தேதி நடிகர் சங்கப் பொதுக்குழு கூட்டம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் தலைவர் நாசர் தலைமையில், காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்த பொதுக்குழுவில் பெரிய விவகாரங்களாக மாறிவரும் முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கவும், முடிவு எடுக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக தமிழ் சினிமாவில் நடிகைகள் தரப்பில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்கள், பாலியல் சீண்டல்களை விசாரிக்க கமிட்டி அமைத்தல், மேலும் நடிகர் சங்க கட்டிடம் பாதியில் நிற்பதால், அதை கட்டி முடிக்க வெளிநாடுகளில் நட்சத்திர இரவு நடத்தி நிதி திரட்டுவது உள்ளிட்டவை குறித்து இந்த பொதுக்குழுவில் விவாதிக்கப்பட உள்ளது. நவம்பர் 1 முதல் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ள ஸ்டிரைக் குறித்தும் இதில் பேச உள்ளனர். விஷால், பூச்சி முருகன், கார்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

சற்று முன்