மக்கள் திலகம் எம்ஜிஆர் தனது படங்களில் புகை பிடிக்கும் காட்சியில் மதுபானம் அருந்தும் காட்சியில் நடிக்க மாட்டார். அப்படியே போதையில் இருப்பது போன்ற காட்சி படத்தில் வந்தால் அருகில் உள்ள பூந்தொட்டியில் மதுபானத்தை கொட்டி விட்டு போதையில் தடுமாறுவது போல் நடித்து சமாளித்து விடுவார்.
அவர் மதுபானம் குடிப்பது போல் சிகரெட் புகைப்பது போல் நடித்தால் தனது ரசிகர்களும் அந்த தவறான பழக்கங்களை பின்பற்ற துவங்கி விடுவர். இதனால் அவர்களது உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும் என்று அவர் கருதினார். அதே போல் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் நடிகர் ராமராஜனும் தனது படங்களில் மது அருந்துதல் புகை பிடித்தல் போன்ற காட்சிகளை முற்றிலும் தவிர்த்தார்.
ஆனால் சிவாஜி கணேசன் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் சத்யராஜ் பிரபு கார்த்திக் விஜய் அஜீத்குமார் போன்றவர்கள் அதுபோன்ற காட்சிகளில் தாராளமாக நடித்தனர். அந்த வகையில் 1980களில் சிகரெட் புகைக்கும் பழக்கத்தை ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்திய முக்கிய நடிகர் ரஜினிகாந்த் என்பதை மறுப்பதற்கில்லை.
ஆனால் இப்போது நடிகைகளும் சினிமாவில் புகைபிடிக்க ஆரம்பித்து விட்டனர். உன்னைப் போல் ஒருவன் படத்தில் ரிப்போர்ட்டராக நடித்த நடிகை அனுஜா ஐயர் சிகரெட் புகைப்பது போல் நடித்திருந்தார். அதே போல் சமீபத்தில் வெளியான டாக்ஸிக் படத்தில் நயன்தாரா சிகரெட் புகைப்பது போன்ற காட்சி வந்தது. டிசி படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி புகை ஊதினார். ஜெயிலர் 2 படத்தில் நடித்த வித்யாபாலன் சிகரெட் புகைப்பது போல டீசரில் காட்சி இருந்தது.
அந்த வரிசையில் இப்போது நடிகை கயாடு லோஹர் சிகரெட் புகைப்பது போன்ற ஒரு காட்சி தி பாரடைஸ் என்ற படத்தில் வருகிறது. தெலுங்கு நடிகர் நானி மற்றும் நடிகை கயாடு லோஹர் நடித்துள்ள படம் தி பாரடைஸ். மோசமான விமர்சனங்களை பெற்ற இந்த படம் முதல் நாளில் ரூ. 75 கோடி வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் கவர்ச்சியான தோற்றத்தில் இந்த படத்தில் நடித்துள்ள நடிகை கயாடு லோஹர் பல காட்சிகளில் நடிகர் நானியுடன் சேர்ந்துக்கொண்டு தம் அடிக்கிறார். ஹீரோக்கள் சிகரெட் புகைத்த காலம் போய் இப்போது கதாநாயகிகளும் சிகரெட் புகைப்பது, சினிமாவின் தரம் எந்த அளவுக்கு தரம் கெட்டு போயிருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. இப்படிப்பட்ட ஒரு சமூக கேடான காட்சியை வைத்து தான் இயக்குனர்கள் சினிமாவில் புதுமை காட்ட வேண்டுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.





