பாலிவுட் சினிமாவில் மூத்த நட்சத்திர நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இந்தியில் அவர்தான் இப்போதைக்கு மூத்த கலைஞராக ரசிகர்களால் மதிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வேட்டையன் என்ற தமிழ் படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன் முக்கியமான ஒரு கேரக்டரில் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தனது வலைதள பக்கத்தில் நடிகர் அமிதாப் பச்சன் எழுதியுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, 2026 ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் காரணமாக எனது தினசரி நேர அட்டவணையும் தூக்கமும் முழுமையாக மாறி உள்ளன. விசித்திரமான நேரங்களில் போட்டிகள் ஒளிபரப்பப்படுவதால் ஒட்டுமொத்த நாளும் சோர்வடைந்தாலும் நாம் தொடர்ந்து போட்டிகளை கண்டு ரசித்து சில நேரங்களில் வருத்தப்படவும் செய்கிறோம்.
குறிப்பாக ஆட்டத்தின் போது ஒரு அணிக்கு சாதகமாகவும் மற்றொரு அணிக்கு பாதகமாகவும் நடுவர்களால் எடுக்கப்படும் சமமற்ற தவறான முடிவுகள் எனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துகின்றன. அதே வேளையில் உலக கோப்பைக்கு தகுதி பெறுவார்கள் என்று யாரும் நினைத்துப் பார்க்காத சிறிய நாடுகள் அசத்தலாக போராடி அங்கீகாரம் பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
உலக அளவில் புகழ்பெற்ற பல முன்னணி நாடுகள் இந்த தொடரில் எதிர்பாராத விதமாக தோல்வி அடைந்து வெளியேறியது வியப்பளிக்கிறது. சிறந்த அணியே வெல்லட்டும் என்று பொதுவாக கூறப்பட்டாலும் இறுதி முடிவுகள் வெளிவரும் வரை எது சிறந்த அணி என்பது யாருக்கும் தெரிவதில்லை. வெவ்வேறு அணிகளுக்காக விளையாடும் வீரர்கள் தங்களின் நாட்டுக்காக விளையாடும்போது கிளப் பகையை மறந்து ஒன்றாக இணைவது பாராட்டுக்குரியது.
இதனை இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் தொடருடன் ஒப்பிடலாம். அங்கும் வெவ்வேறு அணிகளுக்காக மோதிக் கொள்ளும் வீரர்கள் தேசிய அணிக்கு தேர்வாகும் போது ஒரே குழுவாக மாறுகின்றனர். இதற்கு உன்னதமான குணநலன் தேவை. தற்போதைய இளைய தலைமுறை மிக வேகமாக நேர்மறையான வளர்ச்சியை நோக்கி நகர்வதை காணும் அதிர்ஷ்டத்தை பெற்றுள்ளார்கள் என்று நடிகர் அமிதாப்பச்சன் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் நடந்த அர்ஜெண்டினா – எகிப்து நாடுகளுக்கு இடையிலான ஃபிஃபா உலககோப்பை கால்பந்து போட்டியில் கடைசி 12 நிமிடங்களில் ஆட்டத்தின் போக்கே மாறிவிட்டது. அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்ற நிலையில் எகிப்து அணி வெளியேறியது. இதில் போட்டியின் நடுவர்கள் அர்ஜெண்டினா அணிக்கு ஆதரவாக செயல்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.





