பொல்லாதவன் திரைப்படத்தை தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தனுசுடன் மட்டும் இணைந்து நான்கு திரைப்படங்கள் கொடுத்தவர் வெற்றிமாறன். இந்த நான்கு திரைப்படங்களுமே திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. அது மட்டுமல்ல தனுசை அடுத்த கட்டத்திற்கு இந்த திரைப்படங்கள் அழைத்துச் சென்றன.
அசுரன் படத்திற்குப் பிறகு விடுதலை படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை இயக்கிய வெற்றிமாறன், அடுத்ததாக சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தைதான் இயக்குவதாக இருந்தது. ஆனால் அதற்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதால், சிம்புவுடன் இணையும் முடிவு எடுக்கப்பட்டது. கலைப்புலி தாணு தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த திரைப்படத்திற்கான ப்ரமோ படப்பிடிப்பு சென்னை எழும்பூர் அருகே நடைபெற அப்போது அது தொடர்பான புகைப்படங்கள் கசிந்தது. அதில் இயக்குனர் நெல்சன் இருந்தது, ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. ஏற்கனவே வடசென்னை திரைப்படத்தில், முதலில் சிம்பு தான் நடிப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் அந்தத் திட்டம் கைவிடப்பட்ட நிலையில் தனுஷ் வந்தார்.
இப்படியான சூழலில் சிம்புவுடன் வெற்றிமாறன் இணைந்து இருப்பதால் கண்டிப்பாக இது வடசென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக தான் இருக்கும் என்று பலரும் ஆருடம் தெரிவித்து வந்தனர். ஆனால் அப்படி எதுவும் இல்லை என்று முற்றுப்புள்ளி வைத்தார் வெற்றிமாறன். அதே சமயம் வடசென்னை படத்தின் உலகில்தான் இது இருக்கும் எனவும், ஆனால் இது அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இல்லை எனவும் தெளிவு படுத்தினார்.
வடசென்னை கதாபாத்திரங்கள் இதில் இருப்பார்கள் என்றும் அவர் கூறினார். அப்படி என்றால் நிச்சயமாக தனுஷ் மற்றும் சிம்பு இணையும் காட்சி ஏதாவது ஒன்று இருக்கும் என்று ரசிகர்கள் சொல்லி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க படத்திற்கான அடுத்த கட்ட அறிவிப்பு என்பது வெளியாகாமலேயே இருந்தது. ரசிகர்களும் அது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் அண்மையில் அந்த திரைப்படத்திற்கு அரசன் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக கலைப்புலி தாணு அறிவித்தார். இதன் ப்ரோமோ வீடியோ வரும் 16ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. அதற்கு அடுத்த நாள் 17ஆம் தேதி சமூக வலைதளங்களிலும் ப்ரோமோ வீடியோ வெளியாகிறது. அந்த வீடியோ ஐந்து நிமிடங்கள் 33 வினாடிகள் இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது. அதுமட்டுமல்ல ப்ரோமோ வீடியோ பார்ப்பதற்கு திரையரங்குகளில் 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





