நடிகர் அஜித், இயக்குனர் சிறுத்தை சிவா உடன் இணைந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். இதில் விவேகம் திரைப்படம் மட்டும் மிக சுமாரான வரவேற்பை பெற, மற்ற மூன்று திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன.

தொடர்ந்து கோட் சூட் பாணியிலும், நகரம் சார்ந்த கதைக்களத்திலும் நடித்து வந்த அஜித்திற்கு ஒரு சிறிய மாற்றம் தேவைப்பட, முழுக்க முழுக்க கிராமம் சார்ந்த கதைக்களத்தை கொண்ட வீரம் திரைப்படத்தில் நடித்தார். முழுக்க வேட்டி சட்டையுடன் காட்சியளித்த அஜித்திற்கு, இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதை தொடர்ந்து நடித்த வேதாளம் திரைப்படமும் வசூல் மழை பொழிந்தது.
தங்கையை பாதுகாக்கும் அண்ணன், ரவுடிகளை தங்கைக்கு தெரியாமல் வதம் செய்வதுதான் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. படத்தில் தெறிக்க விட்ட ஆக்சன் காட்சிகளும், அனிருத்தின் இசையும் பக்க பலமாக அமைய, வேதாளத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.

இந்த நிலையில் வேதாளம் திரைப்படம் தற்போது, தெலுங்கில் போலோ சங்கர் என்னும் பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. அங்கு மெகா ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சிரஞ்சீவி, தொடர்ந்து ரீமேக் கதைகளையே தேர்வு செய்து வரும் நிலையில், தற்போது அஜித்தின் வேதாளம் படத்தையும் கையில் எடுத்திருக்கிறார்.
இதில் சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷும், ஜோடியாக தமன்னாவும் நடித்துள்ளனர். இதன் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படம் வரும் 11ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில், போலோ சங்கர் டிரைலரை சிலர் இணையத்தில் விமர்சித்திருந்தனர். இதுகுறித்து பேசியுள்ள அந்தப் படத்தின் இயக்குனர் மெஹர் ரமேஷ்,
போலோ சங்கர் ட்ரெய்லரை நீங்கள் கிரிஞ்ச் என்று கூறினால், அதைவிட பத்து மடங்கு கிரிஞ்சாக தமிழில் வெளியான வேதாளம் திரைப்படம் இருக்கும். அந்தப் படத்தை நான் அப்படியே எடுக்கவில்லை. கதையை மட்டும் மையமாக வைத்து பல காட்சிகளை மாற்றி அமைத்துள்ளேன் என்று கூறியிருக்கிறார். இயக்குனரின் இந்த பேச்சுக்கு அஜித் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வேதாளம் படம் கிரிஞ்ச் என்றால் அதை ஏன் ரீமேக் செய்கிறீர்கள் என்றும் அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





