இந்திய திரை உலகில் ஒட்டுமொத்தமாக மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் லியோ. படம் வெளியாவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே இருப்பதால் இணையதளம் முழுவதும் லியோ தொடர்பான தகவல்களே ஆக்கிரமித்துள்ளன.
மாஸ்டர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, லோகேஷ் கனகராஜ் மீண்டும் தளபதி விஜய் உடன் இந்த திரைப்படத்தில் இணைந்திருக்கிறார். லோகேஷின் நெருங்கிய நண்பரும், மேயாத மான் குளுகுளு திரைப்படங்களை இயக்கிய ரத்னகுமார் இதில் திரைக்கதையை எழுதி இருக்கிறார். இவர் ஏற்கனவே மாஸ்டரிலும் வேலை செய்திருந்தார்.
படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக சஞ்சய் தத் மற்றும் அர்ஜூனுக்கு மிக வெயிட்டான கதாபாத்திரத்தை லோகேஷ் கனகராஜ் கொடுத்து இருக்கிறாராம். இருவரின் பிறந்தநாளன்று வெளியான கிளிம்ப்ஸ் வீடியோவும், போஸ்டர் ரிலீஸ் அவர்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தையுமே இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.
இதில் சஞ்சய் தத் ஆண்டனி தாஸாகவும், அர்ஜுன் ஹரால்டு தாஸ் ஆகவும் வருகின்றனர். விஜய்க்கு லியோதாஸ் என்ற கதாபாத்திரத்தை லோகேஷ் எழுதி இருக்கிறார். தாஸ் பிரதர்ஸ் கூட்டணியில் இந்த மூன்று பேருமே இருப்பார்களாம். ஒரு கட்டத்தில் அதிலிருந்து விஜய் விலக பிறகு ஏற்படும் மாற்றங்கள் தான் படத்தின் கதைக்கரு என்று கூறப்படுகிறது. ஏற்கனவே லியோவில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி இருக்கிறது.
படத்திற்கு தணிக்கை குழுவினர் யுஏ சான்றிதழை வழங்கி உள்ளனர். மொத்தம் இரண்டு மணி நேரம் 43 நிமிடங்கள் லியோ திரைப்படம் ஓடுகிறதாம். இன்று லியோவின் டிரைலர் வெளியாக இருப்பதால், விஜய் ரசிகர்கள் இணையத்தை தெறிக்க விட காத்திருக்கின்றனர். இந்த சூழலில், சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் அயலான் திரைப்படத்தின் டிரைலரும் நாளை வெளியாகிறது.
இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஏலியன்கள் பூமிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்ற சின்ன கற்பனையை கொண்டு இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது. படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிப் போய் வந்த நிலையில், வரும் பொங்கலன்று வெளியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ட்ரெய்லர் பணிகளை படக்குழு முடித்துள்ளது. மொத்தம் இரண்டு நிமிடங்கள் எட்டு வினாடிகள் ட்ரெய்லர் ஓடுகிறதாம். இந்த திரைப்படம் வித்தியாசமான கதை கண்ணோட்டத்தை கொண்டிருப்பதால், ட்ரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.





